தினம் ஒரு தகவல் : ஒரு பெண்ணின் போராட்டம் - EDUNTZ

Latest

Search here!

الخميس، 9 سبتمبر 2021

தினம் ஒரு தகவல் : ஒரு பெண்ணின் போராட்டம்

“நான் ஏழையாக இருக்கலாம். படிக்காதவளாக இருக்கலாம். ஆனால் மலைகளும் ஏரிகளும் எங்களின் பொக்கிஷங்கள் என்பதைத் தெரிந்துவைத்திருக்கிறேன்’’ என்கிறார், பெரு நாட்டைச் சேர்ந்த மேக்சிமா ஆக்கூன்யா த சாப். தனியொரு பெண்ணாக சர்வதேச தங்கச்சுரங்க நிறுவனத்தை எதிர்த்துப் போராடி, வெற்றி பெற்றிருக்கிறார். 1994-ம் ஆண்டு மேக்சிமாவின் குடும்பம் மலைப் பிரதேசத்தில் 60 ஏக்கர் நிலத்தை வாங்கி, குடிபெயர்ந்தது. சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு, விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர். 

 நிலத்தில் இருந்து உணவுப் பொருட்களையும் ஆடு, மாடுகள் வளர்த்து பால், பாலாடைக்கட்டிகளையும் பெற்றுக்கொண்டனர். ஓய்வு நேரங்களில் கம்பளி ஆடைகளை நெய்வார்கள். எப்போதாவது காய்கறிகளையும் பால் பொருட்களையும் கம்பளித் துணிகளையும் அருகில் இருக்கும் நகரத்துக்கு எடுத்துச் சென்று விற்று வருவார்கள். அவர்களின் வாழ்க்கை அந்த அழகிய மலைக் கிராமத்தில் அமைதியாகக் கழிந்துகொண்டு இருந்தது. 

 2011-ம் ஆண்டு பெய்த மழையின் போது, ஆடுகள் குளிரில் குரல் கொடுத்தன. பலத்த காற்றுக்குத் தகரக் கூரை விநோதமான ஒலியை எழுப்பியது. திடீரென்று வீட்டின் கதவை யாரோ ஆக்ரோஷமாகத் தட்டினார்கள். திறந்து பார்த்தபோது சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் ராணுவத்தைச் சேர்ந்தவர்களும் நின்றுகொண்டிருந்தனர். உடனே அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடும்படி கூறினர். “எங்களின் நிலத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர முடியாது” என்று மேக்சிமாவும் அவரது கணவரும் உறுதியாக மறுத்தனர். 

உடனே காட்டுமிராண்டித்தனமான செயல்களில் அவர்கள் இறங்கினர். வீட்டில் உள்ள பொருட்களை வீசினர். ஆடுகளை அபகரித்தனர். அடித்த அடியில் மகள்களில் ஒருவரும், கணவரும் சுயநினைவை இழந்தனர்.தென் அமெரிக்காவின் ஒரு சுரங்க நிறுவனத்துக்கு பெரு அரசாங்கம் 7,400 ஏக்கர் நிலத்தை வழங்கி இருந்தது. அந்த நிலத்துக்கு அருகில் மேக்சிமாவின் நிலம் இருப்பதால், அதையும் அபகரிக்க அவர்கள் திட்டமிட்டனர். படிப்பறிவு இல்லாத ஏழைப் பெண், மிரட்டலுக்குப் பயந்து ஓடிவிடுவார் என்று நினைத்தனர். ஆனால் நடந்தது வேறு. 

என்ன நிகழ்ந்தாலும் நிலத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக நின்றார், மேக்சிமா. திடீரென்று ஆட்கள் வருவார்கள். மகள்களின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள். மகனை அடித்து நொறுக்குவார்கள். கணவர் மீது பொய் வழக்குப் போடுவார்கள். கண் முன்னே குழந்தைகள் படும் கஷ்டம் மேக்சிமாவின் மனதை வேதனைப்படுத்தும். ஆனாலும் மனத்தைத் தேற்றிக்கொண்டு, அவர்களை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக இருந்தார்.2012-ம் ஆண்டு சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தார் என்று வழக்குத் தொடுக்கப்பட்டது. மாகாண நீதிமன்றமும் இவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி தீர்ப்பு வழங்கியது. 30 நாட்களில் இடத்தைக் காலி செய்யவேண்டும். 

இல்லாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், 1.4 லட்ச ரூபாய் அபராதமும் கட்டவேண்டும் என தீர்ப்பு வந்தது. மேல் முறையீடு செய்தார் மேக்சிமா. வழக்குக்காக தொலைதூரத்தில் உள்ள நகரத்துக்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். பஸ்சில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றம் செல்லாவிட்டால், பாதகமாகத் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது. அதனால் 8 மணி நேரம் நடந்தே சென்று வந்தார், மேக்சிமா. பக்கத்து கிராமங்களில் இவரைப் போலவே மேலும் சிலர் நிலம் கொடுக்க மறுத்து போராட்டங்களை நடத்தினர். 

4 பேர் தங்கள் உயிர்களை இழந்தனர். போராட்டங்களுக்கு மக்களிடம் ஆதரவு பெருக ஆரம்பித்தது. தனியொரு பெண்ணின் போராட்டம் வெளி உலகத்துக்குத் தெரியவந்தது. மனித உரிமைகள் ஆணையம் அவருக்கு ஆதரவாக நின்றது. பல்வேறு சுற்றுச் சூழல் அமைப்புகளும் தங்கள் ஆதரவை அளித்தன. இரண்டு ஆண்டுகள் வழக்கு நீண்டுகொண்டே சென்றது. இறுதியில் மேக்சிமாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. ஆனாலும் தனக்கு மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கிறார், மேக்சிமா.

ليست هناك تعليقات:

إرسال تعليق