இரவு முழுவதும் தூக்கமில்லாமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் கணேசன். 'விடிந்தால் கடன் கொடுத்தவர் வந்து வாசலில் நிற்பார். என்ன பதில் சொல்வது? என்ன செய்வது?' என புரியாமல் குழப்பத்தில் இருந்தான். தொழில் தொடங்கும்போதே அவன் மனைவி “அகலக் கால் வைக்க வேண்டாம். இருப்பதை வைத்து தொழில் தொடங்குவோம். கடன் எதுவும் வாங்க வேண்டாம்” என்றாள். அதைக் கேட்காமல், அதிகமாக ஆர்டர் கிடைக்கும் என கடன் வாங்கி தொழிற் சாலையைவிரிவாக்கம் செய்தான்.
கொரானா பரவல்
காரணமாக புதிய வேலை எதுவும் வரவில்லை.
பழைய வாடிக்கையாளர்களில் சிலரையும் இழக்க
நேர்ந்தது. செய்து கொடுத்த வேலைக்கும் இதுவரை
பணம் வரவில்லை. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்
உடனடியாக பணத்தையும், அதற்குரிய வட்டியையும்
கொடுக்கும்படி கேட்டார். அவர் கொடுத்த கெடு
இன்றோடு முடிகிறது.
கடனை அடைப்பதற்காக மனைவியிடம் அவளின்
நகைகளையும், மகளின் திருமணத்திற்காக சேர்த்த
நகைகளையும் அடகு வைப்பதற்கு கொடுக்குமாறு
கேட்டிருந்தான். அதனால் கோபித்துக்கொண்ட அவள்
மகனையும், மகளையும் அழைத்துக் கொண்டு,
அம்மா வீட்டிற்குச் சென்று விட்டாள்.
எல்லாவற்றையும் நினைத்தவாறே படுத்திருந்தான்.
விடியற்காலையில் அழைப்பு மணி ஒலித்தது. 'இந்த
நேரத்தில் யாராக இருக்கும்?' என்ற யோசனையுடன்
படுக்கையை விட்டு எழுந்து சென்று வாசல் கதவை
திறந்தவன், ஸ்தம்பித்து நின்றான். வந்திருந்தது
அவனது அம்மா.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு,
தொழில் தொடங்குவதற்கு பணம் வேண்டும் என
கிராமத்தில் வசிக்கும் அப்பாவிடம் கேட்டபோது ஏற்பட்ட
சண்டையால், பேச்சுவார்த்தை நின்று போனது.
இன்று அம்மா கையில் பெட்டியுடன் வந்து நிற்பதை
பார்த்தவுடன் 'வாங்க' என அழைக்காமல் வாயடைத்து
நின்றான். “உனக்கு என் மீது உள்ள கோபம்
போகவில்லையா?" என கூறிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் அவளது அம்மா
தனது மனைவி ஊரில் இல்லை என தெரிவித்தான். “எனக்குத் தெரியும். எப்படி நீ கடனை அடைப் பதற்காக நகைகளைக் கேட்கலாம்? அதை நீ அடகு வைப்பதற்கோ, விற்பதற்கோ உரிமை கிடையாது. அவள் செய்தது சரிதான்” என்றாள்.
அம்மா நான் இன்று இருக்கும் நிலைமையில் இதைத்தான் செய்ய முடியும். ஆபத்து காலத்தில்
உதவுவதற்குத்தானே நகைகள் சேமிப்பது? நான்
கேட்டது தவறா?" என்றான்.
'ஆமாம் தவறுதான். ஒரு செயலை செய்ய
முற்படும்போது அதன் நன்மை, தீமைகளை, பின்
விளைவுகளை ஆராய்ந்து தான் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்திருந்தால், இது போன்ற இடர்
பாடுகள் உனக்கு நேர்ந்திருக்காது” என்றாள் அம்மா.
“நீ குழந்தையாக இருந்தபோது உன் பசியறிந்து
சோறு ஊட்டியவள் நான். எனக்குத் தெரியாதா நீ
துன்பத்தில் இருக்கிறாய் என்று. பிடி இந்த பத்து
லட்ச ரூபாயை. இன்னும் பணம் தேவை என்றால்,
வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து இருக்கிற
கடனை அடைக்கலாம். உனக்கு எப்போது முடியுமோ
அப்போது எனக்கு திருப்பிக் கொடு” என்று கூறி
பணத்தையும், வீட்டுப்பத்திரத்தையும் அவனது கையில்
கொடுத்தாள்.
தான் துன்பத்தில் இருப்பதை அறிந்து ஓடி வந்து
உதவிய அம்மாவைப் பார்த்து, "இதுதான் தாயுள்ளமோ?
என்று கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவாறு,
தனக்குள்ளே கேட்டுக்கொண்டான் கணேசன்.
நன்றி
தி பிரேமா
திருச்சி
No comments:
Post a Comment