பகுதி நேர வேலை... அவசியம்... திட்டமிடல்! - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 19 October 2021

பகுதி நேர வேலை... அவசியம்... திட்டமிடல்!

விஞ்ஞான உலகத்தில் கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. ஒரு மனிதனின் அறியாமையை விலக்கி அறிவைப் பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே கல்வி. வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளை வெளிமாநிலத்திற்கு, வெளிநாட்டிற்கு அனுப்பி உலக அளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். 

மிகவும் பின்தங்கிய பொருளாதாரச் சூழ்நிலையில் உள்ள பெற்றோர்களோ, எப்பாடுபட்டேனும் குழந்தைகளுக்கு கல்வியறிவைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்கின்றனர். ஆனால், அனைத்துத் துறைகளும் வணிகமயமாகிவிட்ட நிலையில், கல்வியும் விதிவிலக்கல்ல. அடிப்படைக் கல்வியறிவு பெறக் கூட அதிக பணம் தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் குறைவு என்றாலும் என்றாலும் எல்லாருக்கும் அதில் இடம் கிடைப்பதில்லை. 

மேலும் கல்விக்கான இதர செலவுகள் மலைக்க வைக்கின்றன. அதிலும் தனியார் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என்றால் சொல்லவே தேவையில்லை. தற்போது கல்வி கற்பதற்கான விலை உயர்ந்துவிட்டதால் வசதியில்லாத மாணவர்கள், தங்களுடைய படிப்பைத் தொடர ஏதாவது வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். படித்துக் கொண்டே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் தள்ளப்படுகிறார்கள். 

 படிப்பைப் பாதிக்காத வகையில் எப்படி பகுதி நேர வேலையைச் செய்வது? பகுதி நேர வேலை... திட்டமிடல்! முறையாகத் திட்டமிடாமல் மாணவர் ஒருவர் பகுதி நேர வேலைக்குச் சென்றால், படிப்பு, வேலை இரண்டிலும் நிறைவு காண முடியாத நிலையே ஏற்படுகின்றது. எனவே, படிக்கத் தொடங்கும்முன் அல்லது பகுதி நேர வேலைக்குச் செல்லுமுன் முறையாகத் திட்டமிட வேண்டும். படிப்புக்கு ஆகும் செலவு என்ன? எவ்வளவு பணம் இருப்பு உள்ளது? இன்னும் எவ்வளவு தேவைப்படுகிறது எனத் திட்டமிட்டு அதற்கேற்ப பகுதிநேர வேலையைத் தேர்வு செய்ய வேண்டும். 

அறிவை வளர்த்துகொள்ளும்விதமாக அந்த வேலை இருந்தால் கூடுதல் சிறப்பு. உதாரணமாக கல்வி நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராக சேரலாம். படிப்பே முக்கியம்! அடுத்ததாக, கல்லூரி வகுப்பு நேரம், வீட்டிலிருந்து படிக்க வேண்டிய நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் மட்டுமே வேலைக்குச் செல்ல வேண்டும். 

முதலில், படிப்பு நேரம் தவிர, வேலை செய்வதற்கு கூடுதலாக நேரம் இருப்பதை உறுதி செய்த பின்னரே வேலையில் சேர வேண்டும். படிப்பு, வேலை நேரங்கள் இரண்டும் ஒன்றையொன்று பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் படிப்புக்குத்தான் முன்னுரிமை என்பதை மறந்துவிட வேண்டாம். ஒருவேளை வேலையானது உங்களுடைய படிப்பைப் பாதித்தால் தாமதிக்காமல் வேலையை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும். 

படிப்பு, பகுதி நேர வேலை, ஓய்வு நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பின்னர் களத்தில் இறங்குவது நல்லது. பயன்கள் எவை? பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிந்தவுடன் நண்பர்களுடன் அரட்டை, சமூக வலைதளங்களை நோட்டமிடுதல் உள்ளிட்டவற்றுக்காக தேவையின்றி நேரம் செலவழிக்கும் மாணவர்களுக்கு பகுதிநேர வேலை சிறந்ததே. நேரத்தை வீணாகச் செலவழிக்காமல் பயனுள்ளவகையில் பயன்படுத்த பகுதி நேர வேலை சரியாக இருக்கும். வேலையின் மூலம் கிடைக்கும் பணம் மாணவர்களின் கல்வி, உணவு, இதர செலவுகளுக்கு பயன்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 

அதுமட்டுமின்றி படிக்கும்போதே பணத்தின் அருமையும் மாணவர்களுக்கு விளங்கும். மற்ற விஷயங்களிலும் பொறுப்புடன் நடந்துகொள்ள வழிவகுக்கும். பகுதி நேர வேலை செய்யும் மாணவர்கள் தங்களின் உழைப்பு மூலமாக பிற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும். என்னென்ன விளைவுகள்? எந்தவொரு விஷயத்திலும் நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கும். ஆனால், தீமையை நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்வதிலே நம் திறமை ஒளிந்திருக்கிறது. இப்போதெல்லாம் படிக்கும் மாணவர்கள் கூட, எப்போதும் தங்கள் கையில் கொஞ்சமாவது பணம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

இளம்வயதிலேயே பணத்தை நிர்வகிப்பது அவசியமானதும் கூட. இதன் காரணமாகவே, பெரும்பாலோர் படிக்கும் காலத்திலேயே வேலை செய்ய முற்படுகின்றனர். இரண்டு விஷயங்களையும் ஒரே நேரத்தில் செய்வது சில எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஓய்வுக்கு நேரமின்றி உடல் சோர்வுடன் இருப்பது, தேர்வுக்கு படிக்க கூடுதல் நேரமின்மை, நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடியாமை போன்ற இதர பிரச்னைகளும் ஏற்படலாம். இதில், உடல்நலப் பிரச்னைகள் எனில் ஓய்வு எடுத்துதான் ஆக வேண்டும். இரண்டையும் ஒரு சேர செய்ய முடியாதபட்சத்தில் வேலையை விட்டு விடுங்கள். 

 நண்பர்களுக்குப் புரிய வையுங்கள்! நண்பர்கள் அழைத்து வெளியில் செல்ல முடியாத தருணத்தில், நீங்கள் வேலைக்குச் செல்வது குறித்து நண்பர்களுக்கு எடுத்துக்கூறி உங்கள் நிலையைப் புரிய வைக்க வேண்டும். உங்கள் விடுமுறை நாள்களில் கிடைக்கும் நேரங்களில் நண்பர்களுடன் நேரம் செலவழியுங்கள். 

மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம். படிப்பு, வேலை என இரண்டிலும் ஈடுபடுவதால் திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் செய்ய முடியாவிட்டாலும் முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். தேர்வுக் காலங்களில்... அடுத்ததாக தேர்வு நேரத்தில் கூடுதல் நேரம் படிக்க வேண்டியிருக்கும் பட்சத்தில் அந்த தினங்களில் வேலைக்குச் செல்வதை தவிர்த்துவிடலாம். வேலைக்குச் செல்வதால் உடல்நலக்கோளாறுகள் ஏற்படலாம். 

வேலைக்குச் செல்வதால் படிப்பதற்கு நேரம் போதவில்லை என்று நீங்கள் உணர்ந்தால் வேலையை உடனடியாக விட்டுவிடுங்கள். சில நாடுகளில் மாணவர்கள் கல்வியுடன், அவசியம் பகுதிநேர வேலை பார்க்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. ஆனால், படிப்பை பாதிக்காதவாறு மாணவர்கள் வேலையில் ஈடுபட்டால் மட்டுமே அது நல்லது. நன்மையும்... தீமையும்! ஆனால், மாணவர்கள் ஒரு துறையில் சிறந்து விளங்கவேண்டும், ஒரு துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமெனில் அவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முழுமையான நேரத்தை படிப்பில் ஈடுபடுத்தினால் மட்டுமே மாணவருக்கு முழுமையான கல்வி கிடைக்கும் என்பது பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்து. 

பகுதிநேர வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாவிட்டாலும் அதுவும் மன அழுத்தத்தைக் கொடுக்கும். மன அழுத்தத்தினால் உடல்நலமும் பாதிக்கப்படலாம். மேலும் இது சமூகத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, படிப்புக்கு முன்னுரிமை அளித்து கல்வி பாதிக்காத வகையில் பகுதிநேர வேலையில் ஈடுபட்டால் பொறுப்பான மாணவர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்.

No comments:

Post a Comment