ஒவ்வொரு கிராமத்திலும் 'புஸ்தக கூடு' - EDUNTZ

Latest

Search here!

Monday 4 October 2021

ஒவ்வொரு கிராமத்திலும் 'புஸ்தக கூடு'

தமிழகத்தில், கிராமப்புற மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டுமெனில், கேரளாவைபோல் இங்கும் கிராம புத்தக அலமாரி திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்,'' என்கிறார் எழுத்தாளர் சு.வேணுகோபால்.


கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பெரும்குளம் கிராமம். இங்குள்ள மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க, புத்தக அலமாரி திட்டத்தை, அம்மாநில அரசு செயல்படுத்தி உள்ளது. அங்கு, 'புஸ்தக கூடு' என்றழைக்கின்றனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் சிறிய புத்தக அலமாரி வைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள புத்தகங்களை எடுத்து படித்து விட்டு, மீண்டும் அலமாரியில் வைத்து விடுகின்றனர்.தேசிய வாசிப்பு தினத்தை முன்னிட்டு, கேரள முதல்வர் பிரனாயி விஜயனால் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம், அம்மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இதுபோன்ற திட்டம், மகாராஷ்டிரா மாநிலத்தில், 2017ல் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தினால், கிராமப்புற இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும், என்கிறார் எழுத்தாளர் சு.வேணுகோபால்.அவரிடம் பேசியபோது...நமது நாட்டில் அதிக கல்வி அறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலங்களாக, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை கல்வி கற்றலில், 100 சதவீதத்தை எட்ட வேண்டும் என்றால், நவீன கல்வி முறையை உருவாக்க வேண்டும். இதில் கேரளா முன்னோடி மாநிலமாக உள்ளது. பாடப்புத்தகங்களை மட்டும் மாணவர்கள் படித்தால் போதாது. 

கலை இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த பொது நுால்களையும் படிக்க வேண்டும்.கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வாசிப்பு பழக்கம் இல்லை. பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மட்டுமே கிளை நுாலகங்கள் பகுதி நேரம் செயல்படுகின்றன. 

அங்கு சென்று புத்தகங்கள் வாசிக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.தமிழகத்தில் கிராமப்புற மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்றால், கேரளா மாநிலத்தைபோல் கிராமப்புறங்களில் புத்தக அலமாரி திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். கிராமம்தோறும், புத்தக அலமாரிகளை உருவாக்க வேண்டும். கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்கள், பொதுமக்கள் ஓய்வாக இருக்கும்போது புத்தகம் படிக்க வாய்ப்பாக அமையும், என்றார்.

No comments:

Post a Comment