ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கற்கண்டு - தொடர் இலக்கணம் - பகுதி 1 - எழுவாய் , பயனிலை , செயப்படுபொருள் - எழுத்து & காட்சிப்பதிவு விளக்கம் - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 13 November 2021

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கற்கண்டு - தொடர் இலக்கணம் - பகுதி 1 - எழுவாய் , பயனிலை , செயப்படுபொருள் - எழுத்து & காட்சிப்பதிவு விளக்கம்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கற்கண்டு - தொடர் இலக்கணம் - பகுதி 1 - எழுவாய் , பயனிலை , செயப்படுபொருள் - எழுத்து & காட்சிப்பதிவு விளக்கம் 

வகுப்பு -9 , தமிழ் இயல் 1 - கற்கண்டு - தொடர் இலக்கணம் 

 வணக்கம் நண்பர்களே ! நாம் இன்று இயல் 1 ல் கற்கண்டு பகுதியில் உள்ள தொடர் இலக்கணம் பற்றி விரிவாகக் காண்போம். பாடத்திற்குள் செல்லும் முன் எழுவாய் , பயனிலை , செயப்படுபொருள் பற்றிய இனிய , எளிய விளக்கத்தை நம்முடைய பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப்பதிவில் காண்போம். 

எட்வர்டு வந்தான். 

இந்தச் சொற்றொடரில் பெயர்ச்சொல், எட்வர்டு என்பதாகும். இந்தச் சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல்லையே எழுவாய் என்கிறோம். 

 கனகாம்பரம் பூத்தது. 

இந்தச் சொற்றொடரில் வினைச்சொல், பூத்தது. இந்த வினைச்சொல்லே பயனிலை ஆகும். ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் பயனிலை என்கிறோம். 

 மீனா கனகாம்பரத்தைச் சூடினாள். 

இத்தொடரில், சொற்றொடர் எழுவதற்குக் காரணமாக அமைந்த மீனா என்னும் பெயர்ச்சொல்லே எழுவாய் ஆகும். அவ்வெழுவாயின் பயனிலை சூடினாள் என்பதாகும். எனில், மற்றொரு பெயர்ச்சொல்லான கனகாம்பரம் என்பது யாது? அது செயப்படுபொருள் என்று அழைக்கப்படுகிறது. எழுவாய் ஒரு வினையைச் செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே, செயப்படுபொருள் ஆகும். ஒரு தொடரில் எழுவாயும், செயப்படு பொருளும் பெயர்ச்சொல்லாகவும் பயனிலை வினை முற்றாகவும் இருக்கும். பயனிலை, அந்தத் தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும்.ஒரு தொடரில் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை செயப்படுபொருள் தோன்றும் தொடர், விளக்கமாக இருக்கும். படித்தாய். இத்தொடரில் படித்தாய் என்பது பயனிலை, நீ என்னும் எழுவாய் வெளிப்படையாகத் தெரியவில்லை. இதைத் தோன்றா எழுவாய் என்று கூறுகிறோம். 

நான் வந்தேன். 

இத்தொடரில் வினைமுற்று பயனிலையாக வந்தது. இது வினைப் பயனிலை எனப்படும். 

சொன்னவள் கலா. 

இங்கு கலா என்னும் பெயர்ச்சொல் பயனிலையாக வந்துள்ளது. இது பெயர்ப் பயனிலை எனப்படும். 

விளையாடுபவன் யார்? 

இங்கு யார் என்னும் வினாச்சொல் பயனிலையாக வந்துள்ளது. இது வினாப் பயனிலை எனப்படும். சில இடங்கள் தவிர, ஒரு சொற்றொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் மூன்றும் இந்த வரிசையில்தான் வரவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. தமிழின் தொடர் அமைப்பின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று. 

எடுத்துக்காட்டு: 

நான் பாடத்தைப் படித்தேன் (எழுவாய், செயப்படுபொருள், பயனிலை) பாடத்தை நான் படித்தேன் (செயப்படுபொருள், எழுவாய், பயனிலை) படித்தேன் நான் பாடத்தை (பயனிலை, எழுவாய், செயப்படுபொருள்) நான் படித்தேன் பாடத்தை (எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்) பாடத்தைப் படித்தேன் நான் (செயப்படுபொருள், பயனிலை, எழுவாய் ) நல்ல நூல் ஒன்று படித்தேன். இத்தொடரில் நல்ல என்னும் சொல், எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருகிறது. இவ்வாறு அமைவதனைப் பெயரடை என்கிறோம். 

மகிழ்நன் மெல்ல வந்தான். 

இத்தொடரில் மெல்ல என்னும் சொல், வந்தான் என்னும் வினைப் பயனிலைக்கு அடையாக வருகிறது. இதை வினையடை என்கிறோம். 

வாழ்த்துகள் மாணவர்களே ! 

 மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , , மதுரை

No comments:

Post a Comment