பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 4
கட்டுரை எழுதுக
தலைப்பு - விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
முன்னுரை :
விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. இந்தச் சாதனையை இதுவரை எந்த இந்தியப் பெண்களும் புரியவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்தவர் நல்ல திறமையுடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். இந்தியாவே போற்றும் மிகச் சிறந்த விண்வெளியில் சாதனை செய்தவர் இவர் மட்டுமே எனலாம்.
பிறப்பும், கல்வியும் :
இவர் இந்தியாவில் ஹரியானா மாநிலம் கர்னலில் கடந்த 1961-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பனாரஸ்லால் சன்யோகிதா தேவிக்கும் மகளாக பிறந்த கல்பனா சாவ்லாவுக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டமும், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டமும் பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
விண்வெளிப் பயணம் :
1995-ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா, கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ் - 87-இல் பயணம் செய்வதற்குத் தேர்வுச் செய்யப்பட்டார். முதல் இந்திய கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ் - 87-இல் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
இந்த விண்வெளி பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார்.
பின்னர் 2003-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ். 107-இல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவழி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணித்த விண்கலம் 16-நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பிப்ரவரி-1-ஆம்தேதி பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அமெரிக்காவின் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உள்பட 7 பேரும் விண்வெளி வீரர்களும் பலியாகினர்.
முடிவுரை :
இந்திய பெண்ணாகிய கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. வீர மங்கையை இழந்த இந்தியா ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ஆம் தேதி கல்பனா சாவ்லாவின் நினைவு தினத்தைக் கடைப்பிடித்து வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வீரதீர சாதனை புரிந்த பெண்களுக்கு 'கல்பனா சாவ்லா விருது' தமிழக அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment