உறவுகளை வளர்க்கும் ‘தலை தீபாவளி’ - EDUNTZ

Latest

Search here!

Thursday, 4 November 2021

உறவுகளை வளர்க்கும் ‘தலை தீபாவளி’

இல்லற வாழ்க்கையில் புதிதாக இணைந்த இரண்டு பேர், தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உண்டு களிப்பதற்கு மட்டுமின்றி, குடும்பங்களுடன் இணைந்து உறவு பாலம் அமைக்கவே தலை தீபாவளி விருந்து எனும் நிகழ்வை முன்னோர்கள் ஏற்படுத்தினர். தலை தீபாவளி விருந்துக்கு புதுமண தம்பதிகளை அழைப்பது தமிழர் பண்பாட்டோடு இரண்டற கலந்தது. தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்ணையும், மருமகனையும் விருந்துக்கு அழைப்பார்கள். 

வேலைவாய்ப்புச் செய்திகள் 



இதற்காக தாம்பூல தட்டில் மணக்கும் முனை முறியாத மஞ்சள், மல்லிகைப்பூ, வெற்றிலை, பாக்கு, பல வகை பழங்கள், சிறிய வௌ்ளி விளக்கு, இனிப்பு வகைகள் வைத்து தலை தீபாவளி விருந்துக்கு அழைப்பார்கள். இதை வீட்டு பெரியவர்களிடம் கொடுத்து புதுமண தம்பதிகளை அழைப்பது சம்பிரதாயம். 

அதன் மூலம் வீட்டு பெரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது மட்டுமின்றி, அன்பு வலை வீசி உறவை வளப்படுத்துவது அதன் நோக்கமாகும். பண்டைய காலத்தில் மாட்டு வண்டியில் ஆடு, கோழி மற்றும் இதர பொருட்களுடன் சென்று விருந்துக்கு அழைத்த செய்திகளை பாட்டி, தாத்தாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

இது போன்ற வழக்கம் இன்னும் ஒருசில ஊர்களில் இருப்பதை அறியலாம். புதுமண தம்பதிகளை விருந்துக்கு அழைப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. புதுமண தம்பதிகள் விருந்து முடிந்து திரும்பி வரும்போது கொடுத்தனுப்பப்படும் இனிப்பு, பழ வகைகளை குடும்பத்தினர் ருசித்து சாப்பிட்டார்களா, யாரெல்லாம் சாப்பிட்டார்கள்? இல்லாவிட்டால் கேட்பாரற்று கிடக்கிறதா? என்பதை வைத்து வீட்டில் உள்ளவர்களை பற்றி அறியலாம். 

 
அதேபோல் பரிசாக கொடுத்த ஆடு, கோழிகளை வைத்தும் மனநிலையை அறியலாம். ஒருசில வீட்டார் பரிசாக கொண்டு வந்த கோழியை சமைத்து, விருந்துக்கு அழைக்க வந்தவர்களுக்கே விருந்து வைத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பதும் உண்டு. ஒருசில வீடுகளில் அவை நன்றாக வளர்க்கப்படும். சிலர் அவற்றை விற்றும் விடுவார்கள். அது பெண்ணின் புகுந்த வீட்டில் உள்ளவர்களின் மனநிலையையும், பெண்ணை நடத்தும் முறையையும் குறிப்பு மூலம் அறிய முன்னோர் வைத்துள்ள ஒருவித யுக்தியே. பொருட்களோடு உரிய மரியாதை கொடுத்து விருந்துக்கு அழைப்பதால் புகுந்த வீட்டில் பெண்ணின் மதிப்பு கூடுவதோடு, உறவுகளின் அன்பும் பெருகும். 

அதேபோல் மனைவியுடன் மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் ஆண் பலவித இனிப்பு பலகாரங்கள், மைத்துனன், கொழுந்தியாருக்கு புத்தாடைகள், பட்டாசுகள் வாங்கி செல்லும்படி பெற்றோர் கூறுவார்கள். அதன் மூலம் மருமகன் மீது மாமனார் வீட்டில் நன்மதிப்பு ஏற்படும். 

 அதோடு மாமனார் வீட்டில் ஒருநாள் விருந்து என்றால் மனைவியின் உறவினர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை நாட்கள் விருந்தின் அளவும் கூடும். சைவம், அசைவம் உள்பட அறுசுவை உணவுகளுடன், நூற்றுக்கணக்கான உறவுகளும் கிடைத்து விடும். மேலும் தலை தீபாவளி விருந்து முடிந்து வீடு திரும்பும் போது உறவினர்கள் கொடுத்த ஏராளமான பரிசுப் பொருட்களுடன் வருவார்கள். அவையும் பகிர்ந்து கொடுக்கப்பட்டு உறவுகளின் கைகளில் சேருவதை பார்க்கலாம். 

 இவ்வாறு புதுமண தம்பதிக்கு விருந்து கொடுத்து பல குடும்பங்களுடன் உறவாட வைப்பதே தலை தீபாவளி விருந்தின் மகத்துவமாகும். விருந்தில் மட்டும் இல்லாமல் விருந்துக்கான அழைப்பு முறையிலும் உறவுகளை ஈர்ப்பதும் தமிழரின் சிறந்த பண்பாடுகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

No comments:

Post a Comment