ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்படும்
முழுநேர ஆராய்ச்சி படிப்புக்கான கல்வி உதவித்தொகை அதிகரிப்பு
அரசாணை வெளியீடு
அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் 2021-22-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டமும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு, கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்படும் இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.16 கோடியாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி, 2021-22-ம் நிதியாண்டுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் ஆராய்ச்சி படிப்புக்கான உதவித்தொகையை அதிகரித்து, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ஆதிதிராவிடர் நல ஆணையர் அரசை கேட்டுக்கொண்டார்.
அவருடைய கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, அதனை ஏற்று, 2021-22-ம் கல்வியாண்டு முதல் முழு நேர ஆராய்ச்சி படிப்புக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தியும், ஒரு மாணவருக்கு ரூ.1 லட்சம் வீதம் 1,600 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment