தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய மாவட்டங்களில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக அரசு பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கான ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது.
அதன்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், கலெக்டரின் உதவியாளர்கள் (தேர்தல்), தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தாசில்தார்கள் (தேர்தல்), துணை தாசில்தார்கள், மண்டல அலுவலர், தேர்தல் பார்வையாளரின் உதவி அலுவலர் (ஒரு மாத அடிப்படை சம்பளம், அதிகபட்சம் ரூ.33 ஆயிரம்);
மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் வட்டார அலுவலர், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்.
பறக்கும்படை, வீடியோ கண்காணிப்பு குழு, கணக்கீட்டு குழு உள்ளிட்ட குழுக்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் (ஒரு மாத அடிப்படை சம்பளம், அதிகபட்சம் ரூ.24 ஆயிரத்து 500) மதிப்பூதியம் வழங்கப்படும்.
மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட, கலெக்டர் உதவியாளர் (பொது), தொடர்பு அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உள்ளிட்ட மற்ற அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் (அதிகபட்சம் ரூ.17 ஆயிரம்) மதிப்பூதியமாக வழங்கப்படும்.
புரோகிராமர்களுக்கு ரூ.17 ஆயிரம், தேர்தல் தரவு ஆபரேட்டர்களுக்கு ரூ.7 ஆயிரம், பிரிவு எழுத்தர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். கடந்த மே 1-ந் தேதியில் இருந்த அடிப்படை சம்பளம் கணக்கில் எடுக்கப்படும்.
இவர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்காக ரூ.158.82 கோடியை தமிழக அரசு அனுமதித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment