ஆசிரியர்களுக்கு தடுப்பூசி அவசியம்'
ஆசிரியர்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள
கட்டாயப்படுத்தக்கூடாது என்பதை ஏற்க முடியாது;
ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது
அவசியம் - சென்னை உயர்நீதிமன்றம்
தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பிறர் நலன் கருதி வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி வள மேம்பாடு அறக்கட்டளை அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் என்ன பொது நலன் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால், மாணவர்கள் நலன் கருதி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாத ஆசிரியர்கள் பிறர் நலன் கருதி வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது என்றும் தெரிவித்த நீதிபதிகள், தடுப்பூசியை இலவசமாக போட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதை சுட்டிக் காட்டியுள்ளனர்.
மேலும் 2 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் பிற்காலத்தில் மாற்று கூட வரலாம் என்றும் மாணவர்களின் நலன் கருதியே தமிழக அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவித்த நீதிபதிகள், கல்வி வள மேம்பாடு அறக்கட்டளை அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment