தமிழக அரசு சார்பில் ‘முதல்வரின் முகவரி’ - புதிய துறை தொடக்கம் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 15 November 2021

தமிழக அரசு சார்பில் ‘முதல்வரின் முகவரி’ - புதிய துறை தொடக்கம்

தமிழக அரசு சார்பில் `முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 

முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள்தொகுதியில் முதல்வர் துறை ஆகியஅலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு `முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது. 

முதல்வரின் தனிப்பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் இந்த துறையின் கீழ் செயல்படுவர். தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பின் முதன்மை பொதுக்குறை தீர்வு அலுவலர் பதவி, முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் பதவியுடன் இணைக்கப்படுகிறது. 

மேலும், 6 பொதுக்குறை தீர்வு மேற்பார்வை அலுவலர்கள் இனி முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலரின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள். தலைமைச் செயலகத்தில் முதல்வரின் முகவரி துறைக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்புத் துறையாக, பொதுத்துறை செயல்படும். முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீர்வுகாண, ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மாநிலம்முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாக (single portal) பயன்படுத்தப்படும். இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். 

ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பின் ஹெல்ப்லைன், தகவல் அழைப்புமையம், 1100 தொலைபேசி எண்ஆகியவை, மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும், மனுக்களைப் பதிவு செய்வற்காகவும் இனி முதல்வரின் முகவரி துறையின் கீழ் இயங்கும். இந்த இணையதளம் தொடர்பான அன்றாட செயல்பாடுகள் குறித்து முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலர், பொதுத்துறை செயலருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வார். 

 உங்கள் தொகுதியில் முதல்வர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment