அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். 

கோவை ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசு, இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். 

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “பெற்றோருடன் நேரம் செலவிடுவதை காட்டிலும், ஒரு மாணவர் அதிகநேரம் பள்ளியில் செலவிடுகிறார். ஒவ்வோர் ஆசிரியரும் மாணவர்கள் மீது காண்பிக்கும் கண்டிப்பு அனைத்தும், அவர்களின் நலனுக்காகவே என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் மாணவர்களை மதிப்பெண்களைக் கொண்டு பிரிப்பது என்பது சரியானது அல்ல. 

ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு துறையில் சிறந்தவராகவும், நுணுக்கமான அறிவு கொண்டவராகவும் விளங்குவர். மாணவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறனை அடையாளம்கண்டு வெளிக்கொணர்வது ஆசிரியரின் கடமையாகும். அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல.அவை பெருமையின் அடையாள மாக மாறியுள்ளது. தற்போது ஏழை, எளிய மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதியேற்று பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது” என்றார். 

 அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது, “இந்த காலகட்டத்தில் பணிச்சுமையின் காரணமாக பெற்றோர் குழந்தைகளுடன் பேசும் நேரம் குறைந்து போகிறது. குழந்தைகளின் நலன் எதுவும் பாதிக்காத விதத்தில் பெற்றோர் அக்கறையுடன் செயல்பட வேண்டியது அவசியம்” என்றார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, தொடக்க கல்வி இயக்குநர் க.அறிவொளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ந.கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

أحدث أقدم

Search here!