இன்ஜினியரிங் மாணவர்களுக்கான, 'செமஸ்டர்' தேர்வுகளை நேரடியாக நடத்த, மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. ஆனால், திட்டமிட்டபடி நேரடி தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 வரையில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகளும், பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டன.
கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதால், நேரடியாக கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கி உள்ளன. சில கல்லுாரிகளில் மட்டும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடக்கின்றன. இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், ஆன்லைன் தேர்வுகளுக்கு பதில் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, டிசம்பரில் நடக்கும் தேர்வுகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன. இதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மதுரையில் கலெக்டர் அலுவலகம் எதிரே, கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இருப்பினும், நேரடி தேர்வு முறையிலேயே டிசம்பரில் செமஸ்டர் நடத்தப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் உறுதி அளித்துள்ளார்; அதற்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே துவங்கி விட்டதால், மாணவர்கள் நேரடி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கல்லுாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment