சுயசுத்த குறைவினால் வரும் தோல் நோய்கள் - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 16 November 2021

சுயசுத்த குறைவினால் வரும் தோல் நோய்கள்

சுயசுத்த குறைவினால் வரும் தோல் நோய்கள் 

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோலில் தோன்றும் நோய்களுள் ‘பங்கஸ்’ என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொதுசுகாதார-சுத்த குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் நோய். ‘மலேசேசியாபர்பர்’ எனும் கிருமியால் இந்த பாதிப்பு உண்டாகிறது. 

இது குழந்தைகள் முதல் முதியோர் வரை யாரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது. மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாக படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. 

தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும் சிறிதளவு அரிப்பு ஏற்படுவதும் இயல்பு. வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும். இன்றைய நவீன மருத்துவத்தில் தேமலைப் போக்கப் பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன. 

காளான் கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்தும் இது பரவ வாய்ப்புள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணிலிருந்து கிருமிகள் பரவி நோய் வருவதுண்டு. காளான் நோய்க்கு ‘டீனியா தொற்று’ என்பது மருத்துவப் பெயர். 

இதை ஏற்படுத்தும் கிருமிகள் பல. அவற்றுள் மைக்ரோஸ்போரம், டிரைகோபைட்டன், எபிடெர்மோபைட்டன் முக்கியமானவை. முதல் இரண்டு கிருமிகள் தோலையும் முடியையும் பாதிக்கின்றன. மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கிருமி தோலையும் நகங்களையும் பாதிக்கக்கூடியவை. இந்தக் கிருமிகள் பாதிக்கிற இடத்தைப் பொறுத்து நோயின் பெயர் மாறும். 

தலை படை, முகப் படை, உடல் படை, தொடை இடுக்கு படை, நகப் படை, கால் படை என்று காளான் படைக்குப் பல பெயர்கள் உள்ளன. பெரும்பாலும் சிறுவர், சிறுமிகளுக்கு இது வருகிறது. இது வருவதற்கு முக்கியக் காரணம், சுயச் சுத்தக்குறைவு. மேலும் இந்த நோய் உள்ளவர் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்வதன் வழியாகவும் இது ஏற்படுவதுண்டு.

No comments:

Post a Comment