பள்ளிக் கட்டணமாக மாறும் பிளாஸ்டிக் குப்பை - EDUNTZ

Latest

Search here!

Saturday, 6 November 2021

பள்ளிக் கட்டணமாக மாறும் பிளாஸ்டிக் குப்பை

பள்ளிக் கட்டணமாக மாறும் பிளாஸ்டிக் குப்பை 


லட்சக்கணக்கில் கல்விக் கட்டணத்தை வாங்கிக் குவிக்கும் பள்ளிகள் மத்தியில், அசாமில் உள்ள அக்சார் பவுண்டேஷன் நடத்தும் தனியார் பள்ளி தனித்து நிற்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பாலித்தீன் பைகளை மாணவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். பள்ளி வளாகம் மட்டுமின்றி, சுற்றுப்புறங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும். முழுமையாக அகற்றும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது இந்தப் பள்ளி. இந்த பள்ளியில் 100 மாணவர்கள் படிக்கிறார்கள். 

கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், ஏழைக்குழந்தைகளும் இலவசமாகப் படிக்க வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். அதோடு, அந்தக் குழந்தைகள் அனைத்து திறனிலும் சிறந்து விளங்கவும் பயிற்சி அளித்து வருகிறார்கள். இந்த சேவையை மஜீன் முக்தார் மற்றும் பர்மிதா சர்மா ஆகியோர் செய்து வருகிறார்கள். பல தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை ஏற்றிக்கொண்டே போய்க் கொண்டிருக்கும் நிலையில், அக்சார் பவுண்டேஷனின் பள்ளி சுற்றுச்சூழல் கல்வியை நோக்கி சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதுதான் இந்தப் பள்ளியின் கல்விக் கட்டணம். அதன் நிறுவனர்களான மஜீன் முக்தார் மற்றும் பர்மிதா சர்மா ஆகியோர் இது குறித்து கூறுகையில், “நாங்கள் பிளாஸ் டிக் மறுசுழற்சி மையத்தைத் தொடங்கியபோது, வீட்டில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளைக் குழந்தைகளிடம் கொடுத்தனுப்ப ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இதன்பின்னர், தான் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுக்கும் குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டோம். 

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முன்பும், நாங்கள் இலவச கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இதன்பின்னர், வீடுகளிலிருந்து 25 வகை பிளாஸ்டிக்குகளை மாணவர்கள் எடுத்து வருகின்றனர். இது பெரும் இயக்கமாக மாறியிருக்கிறது. ஆயில் இந்தியா லிமிடெட் போன்ற நிறுவனங்களில் முதலில் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். ஒரு வாரத்துக்கு 25 பாக்கெட் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து எடுத்து வர வேண்டும் என்று கூறிஇருக்கிறோம். தற்போது மாதந்தோறும் 10 ஆயிரம் பிளாஸ்டிக் பைகளை சேகரித்து வருகிறோம். 

200 பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் 4 ஆயிரம் பிளாஸ்டிக் பாக்கெட்களில் செடிகளை வளர்த்து வருகிறோம்” என்றனர். இந்த பள்ளி மற்ற பள்ளிகளை விட பல விஷயங்களில் மாறுபட்டு நிற்கிறது. வயதை வைத்து தேர்ச்சி அல்லது மதிப்பெண் வழங்கும் முறை இங்கு கிடையாது. மாணவர்களின் அறிவுக்கூர்மையை வைத்தே அவர்கள் தேர்ச்சியாகிறார்கள். இந்த மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பதையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். 

இதன்மூலம், பாடத்தை உற்றுக் கவனிக்கும் திறனை இயல்பாகவே மாணவர்கள் பெற்று விடுகிறார்கள். ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு, உடை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் என அனைத்தையும் வழங்குகிறது இந்த மாதிரிப் பள்ளி. இதன்மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையையும் இது அகற்றி வருகிறது. தங்கள் பள்ளியை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்கிறது அக்சார் பவுண்டேஷன் பள்ளி.

No comments:

Post a Comment