செவ்வாய் கிரகத்தில் குடியேறலாம் என சிலர் முடிவு செய்துள்ளனர். ‘மார்ஸ் ஒன்’ என்னும் டச்சு நிறுவனம்தான் இந்த திட்டத்தை முதலில் முன்னெடுத்தது.
முதலில் இதை கேட்பதற்கு கேலியாகவும் ஆச்சரியமாகவும்தான் இருந்தது. ஆனால் அவர்களின் முயற்சி அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர்.
2024-ம் ஆண்டில் செவ்வாயை நோக்கிய முதல் பயணம் நடைபெறும் என்று தெரிவிக்கும் அந்த நிறுவனம் முதல் கட்டமாக 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்து 24 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 6 பேராக செவ்வாய்க்கு அனுப்பப்படுவார்களாம்.
‘செவ்வாயில் ஒரு காலனி’ என்பது கேட்க சுவாரசியமாக இருக்கிறது. ஒருமுறை போய்விட்டால் திரும்ப வர முடியாது. அங்கேயே இருந்துவிட வேண்டியதுதான். இப்படியெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இன்னும் ரூ.37 ஆயிரத்து 356 கோடியே 27 லட்சம் தேவைப்படுகிறதாம். அதே நேரத்தில் இப்போதைய தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு செவ்வாயில் 68 நாட்களுக்கு மேல் இருக்க இயலாது என்றும் தகவல்கள் வருகின்றன.
அநேகமாக இது மிகப்பெரிய தோல்வித் திட்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதைப் பற்றிய கவலையில்லாமல் செவ்வாய் கிரகத்தில் குடியேறி விடலாம் என்னும் கனவில் சிலர் மிதக்கிறார்கள்.
இந்த முயற்சி வெற்றி பெற்று, செவ்வாய் செல்வார்களா அல்லது வெறும் வாயை மெல்லுவார்களா? என்பது போக போகத்தான் தெரியும், என்கிறது விஞ்ஞான உலகம்.
No comments:
Post a Comment