கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகை கடன்களுக்கான வட்டியை கணக்கிட்டு அனுப்ப வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முறைகேடு கண்டுபிடிப்பு
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை (40 கிராம்) நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதுபற்றிய விவரங்களை கணக்கிடும்போது, கடந்த ஆட்சி காலத்தில் முறைகேடாக கடன் வழங்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்து, தகுதியுள்ள கடனாளிகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
100 சதவீத ஆய்வு
இந்த நிலையில் அனைத்து மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த மார்ச் 31-ந் தேதியில் நிலுவையில் இருந்த பொது நகைக்கடன் மற்றும் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து ஆய்வு நடைபெறும் நாள்வரை நிலுவையில் இருந்த பொது நகைக்கடன்களை வெளிமாவட்ட அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து 100 சதவீத ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அந்த ஆய்வுப்பணி விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ரூ.6 ஆயிரம் கோடி
இந்த நிலையில் மார்ச் 31-ந் தேதிவரை 5 சவரனுக்கு உட்பட்டு பொது நகைக்கடன் பெற்று, அதில் சில கடன்தாரர்கள் நிலுவைத் தொகையை பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும், தகுதி பெறாதவர்களை நீக்கிய பின்னரும், இம்மாதம் 1-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாள்வரை நிலுவையில் இருந்த ரூ.6 ஆயிரம் கோடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது.
அரசு ஏற்கும் வட்டி
கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக்கடன் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியில் இருந்து, அதாவது மக்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்புத் தொகையில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இம்மாதம் 1-ந் தேதிவரை வரும் வட்டியையும் அரசே ஏற்றுக்கொண்டு, கூட்டுறவு நிறுவனங்களின் தள்ளுபடித் தொகையை அரசு வழங்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வட்டிக்கணக்கு
அதன்படி, இம்மாதம் 1-ந் தேதிவரையிலான அசல் தொகைக்கான வட்டியை கணக்கிட ஏதுவாக, எந்தத் தொகையும் திருப்பிச் செலுத்தப்படாத கடன்களுக்கான வட்டியையும், பகுதியாக தொகை செலுத்தப்பட்டு இருந்தால் அந்தத் தொகையை நீக்கிவிட்டு மீதமுள்ள கடனுக்கான வட்டியையும் கணக்கிட்டு பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment