சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டங்கள்
இது தொடர்பாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை முதன்மைச்செயலாளர் ஷம்பு கல்லோலிகரின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இந்திராகாந்தி தேசிய மூத்த வயதானோருக்கான ஓய்வூதியம், தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், தேசிய விதவைகள் ஓய்வூதியம், தேசிய ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், 50 வயதிற்கும் மேற்பட்ட திருமணம் செய்யாத ஏழை பெண் ஓய்வூதியம் ஆகிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆதார் எண் அவசியம்
இந்த திட்டங்களை அமல்படுத்தும் முகமைகள் மூலம், மாநில அரசு நிதியில் இருந்து தலா ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே மத்திய ஆதார் (நிதி மற்றும் மானிய சேவைகள்) சட்டப்படி இந்த அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிடுகிறது.
அதன்படி, இந்த திட்டத்தின்படி பயனடைய விரும்பும் தகுதியுள்ள அனைவரும் ஆதார் நம்பரை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்திருந்தால், அதற்கான பதிவு நம்பரை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் நம்பர் இல்லாதவரோ அல்லது ஆதாருக்காக விண்ணப்பிக்காதவரோ இனி ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் எண் பெறும்வரை...
அதற்காக ஆதார் பதிவு மையங்களை அணுகலாம்.
ஆதார் எண் பெறும்வரை அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். என்றாலும் அவர்கள், சில அடையாள ஆவணங்களை அளிக்க வேண்டும்.
அந்த வகையில், ஆதார் பதிவு அடையாள சீட்டு அல்லது ஆதார் எண் கேட்டு விண்ணப்பித்துள்ள கடிதத்தின் நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகள், ஆதார் நம்பரை பெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment