சாதனைகளை புரிய வயது தடை இல்லை என்பதை பல குழந்தைகள் நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில், துபாயில் வசிக்கும் தமிழக சிறுமி நூவா அல் ஜாப்ரி தனது 3 வயதில், புத்தகங்களை மின்னல் வேகத்தில் வாசிப்பதில் சாதனை படைத்துள்ளார்.
துபாயின் அல் நாதா 1 என்ற பகுதியில் வசித்து வருபவர் நூர் உல் ஜாப்ரி. இவர் இங்குள்ள ஜெர்மனி நாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக உள்ளார்.
தமிழகத்தின் நாகர்கோவிலை சேர்ந்த இவருக்கு ஆபி சப்ரீன் என்ற மனைவியும், 10-ம் வகுப்பு படிக்கும் நுஹ்மான், 8-ம் வகுப்பு படிக்கும் நுயம் என்ற மகன்களும் மற்றும் பிரீ கேஜி படிக்கும் நூவா என்ற மகளும் உள்ளனர்.
இவர்களில் நூவா மழலையாக இருக்கும்போதே எழுத்துக்களை எளிதில் அடையாளம் கண்டு வார்த்தைகளை வாசித்து வந்துள்ளார். இதனை பார்த்த சிறுமியின் தாயார் ஆபி சப்ரீன் மகள் நூவாவை மேலும் ஊக்கப்படுத்தினார்.
முதலில் ஆங்கில சொற்றொடர்களை வாசிக்க தொடங்கிய சிறுமி புத்தகங்களையும் அனாயாசமாக வாசிக்கும் திறன் பெற்றுள்ளார்.
சிறுமியின் ஆற்றலை பார்த்து வியந்த பெற்றோர், உலக சாதனை படைக்கும் அளவிற்கு மகளை தயார் செய்தனர்.
அதனை தொடர்ந்து வெறும் 30 நிமிடங்களில் 67 புத்தகங்களை வாசித்து ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய சாதனை புத்தகங்களில் சிறுமி இடம்பெற்றார். குறிப்பாக அவர் வாசித்ததில் டைனி திங், ஐ விஷ் ஐ வேர் எ பேர்டு, ஜெயண்ட் பிரண்ட்ஸ் உள்ளிட்ட புத்தகங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனை கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்த்தப்பட்டு சிறுமிக்கு சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
‘‘இதற்கு முன்பு 10-ம் வகுப்பு படிக்கும் எங்களது மகன் நுஹ்மானும், அல்லாஹ்வின் 99 திருநாமங்களை மிகக்குறைந்த நேரத்தில் ஒப்புவித்து ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். தற்போது எங்கள் கடைக்குட்டி நூவா, 10 நீண்ட ஆங்கில வார்த்தைகளை ஒப்புவித்து கின்னஸ் சாதனை புரிய தயாராகி வருகிறார்’’ என நூவாவின் பெற்றோர் பெருமிதம் பொங்க தெரிவித்தனர்.
No comments:
Post a Comment