ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறையுங்கள் என்பது அரசின் வலியுறுத்தல். பற்றாக்குறையை குறைக்க வேண்டுமென்றால் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இப்போது அரசு சில பொருட்களை இறக்குமதி செய்யாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து பெட் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் ஸ்கிராப்களை இறக்குமதி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.
பெட் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் ஸ்கிராப்களை இறக்குமதி செய்து அவற்றை மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதற்காக சில நிறுவனங்கள் இத்தகைய பொருள்களை இறக்குமதி செய்தன.
மேலை நாடுகளும் தங்கள் நாட்டின் சூழலைக் காப்பதற்காக பெட் பாட்டில்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் வந்த விலைக்கு அல்லது இனாமாகவே இந்தியாவுக்குத் தள்ளிவிட ஆரம்பித்தன.
இந்த நிலையில்தான் சுற்றுச் சூழல், வனத் துறை அமைச்சகம் பெட் பாட்டில் இறக்குமதிக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இத்தகைய பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இதற்கான மூலப் பொருள்களை அதாவது பெட் பாட்டில்களை இந்தியாவிலிருந்தே திரட்டிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து விதமான வீட்டு உபயோக கழிவுகள், ஏற்றுமதி செய்ய இயலாத மின்னணு பொருட்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் ஆயுள் காலம் பற்றிய விவரம் இல்லாத பொருட்களை கண்டிப்பாக இறக்குமதி செய்யக் கூடாது என்றும் அரசு முடிவு செய்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள், சர்வர்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை ஓராண்டுக்குள் மீண்டும் ஏற்றுமதி செய்தாக வேண்டும்.
இல்லையெனில் அவற்றை இறக்குமதி செய்யக் கூடாது. பயன்படுத்தப்பட்ட மின்னணு மற்றும் மின்சார சாதனங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்யக் கூடாது. அங்குள்ள அலுவலகம் முற்றிலுமாக இங்கு மாற்றப்படும்போது மட்டுமே அந்த அலுவலக மின் சாதனங்களை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
3 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ கருவிகள், மருத்துவ மின் கருவிகள், மின்னணு பொருள்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெருகிவரும் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க அரசு திணறிவரும் சூழலில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக், மின்னணு கழிவுகளுக்கு இதுபோன்ற கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்பது வல்லுனர்களின் கருத்து.
No comments:
Post a Comment