ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முடியுமா...? - EDUNTZ

Latest

Search here!

Saturday, 4 December 2021

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முடியுமா...?

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முடியுமா...? ‘‘உடல் எடையை குறைப்பது எப்படி...?’ இந்த கேள்விக்கான பதில் யூ-டியூப்பில் நிறைய இருக்கிறது. ஆனால் ‘உடல் எடையை ஆரோக்கியமாக குறைப்பது எப்படி?’ என்ற கேள்விக்குதான், பதில்கள் வெகு குறைவாக இருக்கின்றன. 

இதை உணராமல், மக்கள் ஆரோக்கியமற்ற முறைகளில் உடல் எடையை குறைக்க முயல்கிறார்கள்’’ என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், ஸ்வர்ண லதா. சென்னை ஐயப்பன் தாங்கலை சேர்ந்தவரான இவர், உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். அதோடு உடல் எடை குறைப்பு சம்பந்தமான பல்வேறு உடற்பயிற்சிகளையும், நவீன முயற்சிகளையும் ஆராய்ச்சியாக முன்னெடுத்து, அறிவியல் ரீதியான பதில்களை தேடிக் கொண்டிருக்கிறார். 

அதில் சிலவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ‘‘நிறைய மக்கள் உடல் எடையை குறைக்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் ஆசைப்படுகிறார்கள். அதற்காக சில முயற்சிகளிலும் இறங்குகிறார்கள். ஆனால் அதில் 10 சதவிகிதம் மக்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். ஏனெனில் உடல் எடை குறைப்பு என்பது, ஒவ்வொருவருக்கும், அவரவர் உடல்நிலையை பொறுத்து மாறுபடும். 

வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது ஒருவருக்கு பலன் கொடுத்திருக்கலாம், ஆனால் எல்லோருக்கும் பலன் அளித்திருக்காது. அதனால்தான் நிபுணர்களிடம் முறையான ஆலோசனை பெற்ற பிறகே, உடல் எடை குறைப்பு முயற்சிகளில் இறங்க வேண்டும்’’ என்றவர், உலகளவில் கடைப்பிடிக்கப்படும் உடல் எடை குறைப்பு முறைகளை பகிர்ந்து கொண்டார். ‘‘உடல் எடை குறைப்பை இரண்டு விதமாக மேற்கொள்ளலாம். ஒன்று, ‘ஆக்டிவ்’ முறை. 

இது உடலை வறுத்தி செய்யக்கூடியது. உதாரணத்திற்கு, ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை இந்த ஆக்டிவ் வகையில்தான் சேரும். மற்றொன்று, ‘பாசிவ் மெத்தட்’. இது மிகவும் எளிமையானது. தொழில்நுட்ப ரீதியிலானது. அமர்ந்த இடத்திலேயே உடல் எடையை குறைக்கக்கூடியது. இதுதான் சமீபத்திய ‘டிரெண்டிங்’ முறை. இந்த முறையில் இயந்திர கருவிகளின் துணையோடு, உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளில், உறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளைக்கூட அதிக பாதிப்பின்றி கரைக்கலாம். அதீத பருமன் கொண்டவர்கள், முதியவர்கள், நடக்க-ஓட முடியாதவர்களுக்காக, உருவாக்கப்பட்ட உடல் குறைப்பு முறை இது. 

கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், இது ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு முறைதான்’’ என்றவர், பாசிவ் முறையில்தான் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பெண்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை அதிகமாக முன்னெடுக்கிறார். பிரசவத்திற்கு பிறகான உடல் எடையை எப்படி கட்டுப்படுத்துவது?, அதற்கு எந்த முறை சிறப்பானதாக இருக்கும்?, 

உடல் எடையோடு, ரத்தத்தில் கலந்திருக்கும் கொழுப்பு அளவையும் குறைப்பது எப்படி?... போன்ற பல அனுபவ ஆராய்ச்சிகளை முன்னெடுத்து, அந்த தகவல்களை ஆவணமாக தொகுத்து வருகிறார். ‘‘உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டால், முதலில் உங்கள் உடல்நிலையை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள். உடலில் கொழுப்பு எங்கெல்லாம் சேர்ந்திருக்கிறது, அதை எப்படி ‘எனர்ஜி’யாக கரைப்பது, சிறுநீரகம்-இதயம்-நுரையீரல் பகுதிகளில் கொழுப்பு படர்ந்திருக்கிறதா?, 

அதற்கு ஏற்ற எடை குறைப்பு முறைகள் எவை?, நடைப்பயிற்சி-ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளலாமா? இல்லை ‘உணவு டயட்’ மேற்கொள்ள வேண்டுமா?, நீரிழிவு-ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவு ‘டயட்’ பின்பற்றுவது, நம்முடைய உடல் எடையை கால்கள் தாங்குமா?, இல்லை ஆரம்பத்தில் கொஞ்சம் இயந்திர உதவியோடு உடல் எடையை குறைக்க வேண்டுமா..? போன்றவற்றை எல்லாம் நிபுணர்களிடம் தெளிவுபடுத்தி கொண்டு, களத்தில் இறங்குவது சிறப்பான பலனை கொடுக்கும். அதேபோல ஒரே வாரத்தில் 5 கிலோ குறைக்கலாம், 

ஒரே நாளில் 1 கிலோ குறைக்கலாம்... என்பதெல்லாம், முறையற்ற உடல் குறைப்பு முறைகள். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால், ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 5 கிலோ மட்டுமே குறைக்க முடியும். அதுவும் உடல் அமைப்பிற்கு ஏற்ப வேறுபடும்’’ என்றவர், ‘‘திடீரென உணவின் அளவை குறைப்பது, மதிய உணவை தவிர்ப்பது, முதல் நாளிலே ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது போன்றவை நம் உடலுக்கு கெடுதியாக அமைந்துவிடும்’’ என எச்சரிக்கிறார். ‘‘இன்றைய சூழலில் அதிகமாக சாப்பிடுவதால் மட்டுமே உடல் எடை அதிகரிப்பதில்லை. சிலருக்கு மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். 

வேறு சிலருக்கு ரேடியேஷனும் ஒரு காரணமாகலாம். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொபைல் போன்கள் மூலமாக கூட, உடல் எடை பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். உடல் எடை அதிகரிப்பிற்கு, புதுப்புது காரணங்கள் கிடைப்பது போலவே, குறைக்கவும் புதுப்புது வழிமுறைகள் வந்து கொண்டிருக்கின்றன. 

அதில் ஆரோக்கியமானதை தேர்ந்தெடுப்பது, உடலுக்கும், உங்களுக்கும் புத்துணர்ச்சியை தரும்’’ என்றவர், நார்ச்சத்து, புரத சத்து பொருட்களை அதிகமாக உட்கொள்வதால், உடல் எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை வரிகளோடு விடை கொடுக்கிறார். திடீரென உணவின் அளவை குறைப்பது, மதிய உணவை தவிர்ப்பது, முதல் நாளிலே ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது போன்றவை நம் உடலுக்கு கெடுதியாக அமைந்துவிடும்’’

No comments:

Post a Comment