மாணவர்கள் இடர்பாடுகளை தெரிவிக்க ஏதுவாக
அரசு பள்ளிகளில் புகார் பெட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு
விழிப்புணர்வு பலகையை வைக்கவும் அறிவுறுத்தல்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக 6 ஆயிரத்து 177 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.61 லட்சத்து 77 ஆயிரமும், 36 ஆயிரத்து 214 தொடக்கநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3 கோடியே 12 லட்சத்து 14 ஆயிரமும் முதல்கட்டமாக நிதி விடுவிக்கப்பட்டது.
தற்போது மீதமுள்ள தொகையை 6 ஆயிரத்து 172 அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.1,000 வீதமும், அதேபோல் 36 ஆயிரத்து 214 தொடக்கநிலை பள்ளிகளுக்கு தலா ரூ.1,000 வீதமும் என மொத்தம் ரூ.3 கோடியே 73 லட்சத்து 86 ஆயிரம் நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த விடுவிக்கப்பட்ட நிதியினை பயன்படுத்தி அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் இடர்பாடுகள், புகார்களை தெரிவிக்க ஏதுவாக பாதுகாப்பு புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். அந்த பெட்டியில் ‘மாணவர் மனசு' என எழுதப்பட்டிருக்க வேண்டும். மேலும் பெட்டியானது பள்ளி தலைமை ஆசிரியரின் அறைக்கு முன்பாக அனைத்து மாணவர்களும் பார்க்கும் வண்ணமும், எளிதில் அணுகக்கூடிய உயரத்திலும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த பாதுகாப்பு பெட்டி 15 நாட்களுக்கு ஒருமுறை பள்ளிகளில் அமைக்கப்பட்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து அதில் இருக்கும் புகார்களுக்கு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதவிர அனைத்து பள்ளிகளிலும் பள்ளியின் நிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பலகையை வைக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விடுவிக்கப்பட்ட நிதியைக் கொண்டு அனைத்து செயல்பாடுகளும் பள்ளிகளில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment