தொலைக்காட்சி... மாற்றலாம்... பயனுள்ளதாக... - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 1 December 2021

தொலைக்காட்சி... மாற்றலாம்... பயனுள்ளதாக...

 தொலைக்காட்சி... மாற்றலாம்... பயனுள்ளதாக...


இன்றையச் சூழலில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை டிவி பார்ப்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஒவ்வொரு பருவத்தினருக்கும் ஏற்பவும், துறை சார்ந்தும் பல சேனல்கள் வந்துவிட்டதால் இந்தியாவில் இன்று டிவி பார்ப்போரின் எண்ணிக்கை 90 கோடியை எட்டிவிட்டது. 

கண்கவர் விளம்பரங்கள் முதல் வண்ணமயமான ஷோக்கள் வரை ஒரேமாதிரியான பல நிகழ்ச்சிகள் வந்தாலும் அனைத்தையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் நேரத்தை வீணாகச் செலவழிப்பது டிவி மற்றும் மொபைல் போனில்தான். அதிலும் வீட்டில் காலையில் இருந்து மாலை வரை ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி சேனல்கள் பல. குழந்தைகளுக்குக் கூட பிடித்த சேனல்கள், பிடித்த ஹீரோக்கள் உள்ளனர் என பெற்றோர் சொல்லி பெருமைப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன. பிறந்த குழந்தைகள் டிவியைப் பார்த்தால் மகிழ்ச்சியடைகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். 

குழந்தைகளுக்கு ஒரு கெட்ட பழக்கத்தை ஊக்குவிக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஏன், ஒரே வீட்டில் ஒவ்வோர் அறைக்கும் ஒரு தொலைக்காட்சியை வைக்கும் பழக்கம் கூட வந்துவிட்டது. ஏனென்றால் ஒரே நேரத்தில் அம்மா சீரியலையும், அப்பா கிரிக்கெட்டையும், குழந்தைகள் கார்ட்டூன் சேனல்களையும் பார்க்க முடியாதல்லவா? டிவி பார்ப்பதே ஒரு போதையாகிவிட்டது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சிலர் டிவி பார்ப்பதை எப்படியேனும் விட்டுவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் டிவி பார்க்காமல்அவர்களால் இருக்க முடிவதில்லை. குறிப்பாக இளைய தலைமுறையினர் எப்போது நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் செலவழிக்கின்றனர். வாழ்க்கையில் முன்னேறுவதற்காக செய்ய வேண்டிய உருப்படியான செயல்களைச் செய்யாமல் வீணாகப் பொழுதைக் கழிக்கின்றனர். டிவி பார்ப்பதை எப்படிவிடுவது? அல்லது குறைத்துக் கொள்வது? மாற்று நடவடிக்கைகள் வேண்டும்: ஒரு பழக்கத்தை கைவிட வேண்டுமெனில் அதற்குப் பதிலாக இன்னொரு பழக்கத்தை உருவாக்க வேண்டும். ஆம், டிவி பார்ப்பதற்கு மாற்றாக, ஒரு புதிய விஷயத்தை செய்யத் தொடங்குங்கள். நீங்கள் விரும்பிய தொழிலைத் தொடங்கலாம்; புதிய படிப்புகளைப் படிக்கலாம்; 

உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லலாம்; ஏதேனும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம், புத்தகம் படிக்கலாம்... இவ்வாறு உங்களுக்குத் தேவையான- உங்களின் வளர்ச்சிக்குத் தேவையான - புதிய விஷயத்தைத் தொடங்குங்கள். நீங்கள் பிசியாக இருக்கும்போது டிவி பார்க்கத் தோன்றாது. புதிதாக எந்த வேலையும் செய்ய விரும்பவில்லை என்றால் நண்பர்களுடன் நேரத்தைச் செலவழியுங்கள். கேபிள் இணைப்பைத் துண்டித்து விடுங்கள்: மொபைல் போன் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. 

மற்றவர்களை தொடர்பு கொள்ள அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால், டிவி அப்படி அல்ல. நினைத்தால் துண்டித்துவிடலாம். டிவி பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றால், முதலில் உங்கள் கேபிள் இணைப்பைத் துண்டித்துவிடுங்கள். 

ஓரிரு மாதங்கள் துண்டித்துவிட்டால் அப்புறமாக டிவி இல்லாத ஒரு சூழ்நிலை உங்களுக்குப் பழகிவிடும். இதனால், உங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதி நேரத்தை வீண் பொழுது போக்கில் செலவழிக்காமல் மிச்சப்படுத்தலாம். டிவி பார்க்கும் நேரத்தைக் குறையுங்கள்: அனைவராலும் எடுத்தவுடன்கேபிள் இணைப்பைத் துண்டித்துவிடமுடியாது. ஆனால் டிவி பார்ப்பதை படிப்படியாகக் குறைக்கலாம். அதற்கு நீங்களே உங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். 

நாள் முழுவதும் அல்லது பல மணி நேரங்கள் டிவி பார்ப்பவராக இருந்தால், முதலில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட மணி நேரம் (உதாரணமாக 2 மணி நேரம்) மட்டுமே பார்க்க வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் அதற்கு மேல் பார்க்கக் கூடாது. இந்த கட்டுப்பாடுகள் முழுக்க முழுக்க உங்களை மட்டுமே சார்ந்தவை. பின்னர் படிப்படியாக டிவி பார்க்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டே வந்து பிறகு முற்றிலும் நிறுத்திவிடலாம். இலக்குகளை நோக்கி நகருங்கள்: 

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய கனவாவது இருக்கும். அதை அடைய பல ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும். எனவே, நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு மணி நேரம் உங்கள் இலக்கை அடைய வேலை செய்யுங்கள். அந்த ஒரு மணி நேரம் உங்களின் எதிர்கால வெற்றிக்கு நீங்கள் உழைக்கிறீர்கள். இதனை நீங்கள் ஒரு மாதம் செயல்படுத்தினால் பின்னர் இந்த ஒரு மணி நேரம் தானாகவே பல மணி நேரமாக அதிகரிக்கும். கனவை அடைய ஆர்வம் கூடும். புதிய நிகழ்ச்சிகள்... வேண்டவே வேண்டாம்! 

மக்களைக் கவர புதுப்புது வழிமுறைகளைக் கையாளும் டிவி சேனல்களுக்குப் பஞ்சமில்லை. அதிலும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது தொடர் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுகின்றன. புதிய தொடர் நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கினால், அதிலிருந்து விடுபடுவது சிரமம். எனவே, எந்தவொரு புது நிகழ்ச்சியையும் பார்க்க வேண்டாம். இதனால் படிப்படியாக உங்களின் டிவி பார்க்கும் நேரம் குறைந்துவிடும். நேரம் போனால் திரும்பவும் கிடைக்காது: 

நேரம் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு நொடியும் நமக்கானது. நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும். நேரத்தை வீணாகக் கழித்தால் அது திரும்பவும் கிடைக்காது. பயனுள்ளதை மட்டுமே பாருங்கள்: தொலைக்காட்சியில் செய்திகள், உடல் நலன் சார்ந்ததகவல்கள், உங்கள் படிப்பு, வேலை சார்ந்த நிகழ்ச்சிகள், உங்கள் இலக்கு தொடர்பான நிகழ்ச்சிகள் என உங்களுடைய முன்னேற்றத்துக்குத் தேவையான நிகழ்ச்சிகளை மட்டுமே பார்ப்பது என பழக்கப்படுத்திக் கொண்டால், தொலைக்காட்சியும் பயனுள்ளதாக மாறிவிடும். தொலைக்காட்சியை நீங்கள்தான் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment