தினம் ஒரு தகவல் மூக்கில் இருந்து ரத்தம் வருவது ஏன்? - EDUNTZ

Latest

Search here!

Monday, 6 December 2021

தினம் ஒரு தகவல் மூக்கில் இருந்து ரத்தம் வருவது ஏன்?

மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்தத் தொல்லை அதிகமாகக் காணப்படும். இதை ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்' என்று அழைக்கிறார்கள். 

சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ‘ஏர்கண்டிஷனர்’ மாதிரி. வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான். மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர, உள்ளுக்குள் அது மிக மென்மையானது. 

இதன் ஆரம்பப் பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன. இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா' என்று பெயர். இது ஒரு தொட்டால் சிணுங்கி பகுதி. இது லேசாகச் சீண்டப்பட்டால்கூட, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிவிடும். இதை ‘சில்லுமூக்கு' என்றும் சொல்வார்கள். மூக்கிலிருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீதக் காரணம் இந்தப் பகுதியில் உருவாகும் கோளாறுதான். 

மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும். குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்து குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்தக் கசிவு ஏற்படும். 

சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வடியும். குழந்தைகளுக்கு மூக்கில் ‘நீர்க்கோப்பு சதை' வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் சதை வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்கக் குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள் அல்லது சீந்துவார்கள். 

விளைவு, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வகுப்பறைகளில் படிக்கிற குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக, மூக்கில் ரத்தம் வடியும் வாய்ப்பு அதிகம். அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிபவர்களும், நடுத்தர வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மூக்கில் ரத்தம் வந்தால், 'இது சாதாரண சில்லுமூக்கு தொல்லைதான்’ என்று அலட்சியமாக இருக்காமல் உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம், ரத்தப் புற்றுநோய், புற்றுநோய் கட்டி ஆகிய மூன்று காரணங்களாலும் மூக்கில் ரத்தம் வடிவது உண்டு. எனவே இந்த விஷயத்தில் அதிக கவனம் தேவை.

No comments:

Post a Comment