ஐஐடியில் படிக்க விருப்பமா? எழுதுங்கள் JEE தேர்வு!
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி பயில பல வாய்ப்புகள் இருந்தாலும், இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT), தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) போன்றவற்றில் பயில ஆர்வம் காட்டுகிறார்கள்.
காரணம் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பல லட்சம் ரூபாய் ஊதியத்தில் உடனடியாக வேலை கிடைப்பதுதான்.
மத்திய அரசு நிதி உதவியின் கீழ் இயங்கும் இந்த கல்வி நிறுவனங்களில் சேர மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) நடத்தும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (JEE) மாணவர்கள் வெற்றி பெறுவது அவசியம்.
ஜேஇஇ தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்:
"ஜேஇஇ தேர்வுமுறையை பரிசீலனை செய்து புரிந்துகொள்ளும் ஆற்றல் (understanding), ஒரு கருத்தை தெளிவாக உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் (conceptual clarity) மற்றும் புதுமையாக சிந்திக்கும் ஆற்றல் (innovative thinking) போன்ற திறமைகளை உடைய மாணவ, மாணவிகளைச் சரியாக இனங்காணும் வகையில், தேர்வுமுறையை நடைமுறைப்படுத்த அறிக்கை தயார்செய்யுமாறு அசோக் மிஸ்ரா, ஐஐடி ரூர்க்கியின் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு, அக்குழுவின் பரிந்துரைகள் சிலவற்றை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை முன்வந்துள்ளது.
ஜேஇஇ தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் பயிற்சி பெற்று தேர்வை எதிர்கொள்ளாமல், சுயமாக ஒவ்வொரு மாணவனும் பள்ளிப் படிப்புடன் ஒருங்கிணைந்து தொலைநோக்கில் எவ்வாறு தேர்வுக்கு தயாராகலாம் என்று பரிந்துரைக்குமாறு கோரப்பட்டது.
ஐஐடியில் சேர்ந்துதான் பயில வேண்டும் என தீர்மானித்தால், +1-இல் உயிரியல் அல்லாத கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களைத் தேர்வு செய்து முழுமையாக கவனம் செலுத்தி தேர்வுக்கு தயாராகலாம்.
கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்று ஐஐடியில் பயின்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்தும், ஐஐடியின் முன்னாள் மாணவர்களின் ஆலோசனைகளைப் பெற்றும், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளின் வினாக்களை ஆராய்ந்து பயிற்சி பெற்றும் தேர்வை எதிர்கொள்ளும் உத்திகளை அறிந்துகொள்ளலாம்.
அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிலருக்கு சமமான ஈடுபாடு இருக்கும் என்று கூறமுடியாது.
ஆகவே, எந்தப் பிரிவில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று அறிந்து அதன் அடிப்படையில் தயாராக வேண்டும். பிளஸ் 2 தேர்வு எழுதிய பிறகு ஓராண்டு முழுமையாக ஐஐடி தேர்வுக்குத் தயாராகி வெற்றி கண்டவர்களும் உண்டு. அவரவர் அளிக்கும் முக்கியத்துவம் மற்றும் அவரவர் திறன்சார்ந்து முடிவு மேற்கொள்ள வேண்டும்.
நேர மேலாண்மை, தங்களது திறமை மீது முழு நம்பிக்கை கொண்டு முயற்சி மேற்கொள்வது இன்றியமையாத ஒன்று. பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் வளாகத்திற்கு ஐஐடி கல்வி நிறுவனங்களுக்கு வந்து தேர்வு செய்து, வேலைவாய்ப்பு அளிப்பார்கள் என்பதை மனதில் நிறுத்தி முயற்சி மேற்கொண்டால் உற்சாகமாக தேர்வுக்குத் தயாராக முடியும்.
வருங்காலங்களில் தேர்வை எழுதத் திட்டமிடுவோர், NCERT நடத்தும் தேசிய திறன் அறிதல் (NTSE) தேர்வை 10-ம் வகுப்பு பயிலும் போதே எழுதுவது, மேத்ஸ், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி ஓலிம்பியாட் போன்ற அறிவியல் சார்ந்த போட்டிகளில் பங்கேற்பது ஜேஇஇ தேர்வுக்கு அடித்தளமாக அமையும்.
சிபிஎஸ்இ குரூப் மற்றும் ஹோமி பாபா மையம் ஒலிம்பியாட்டை பல்வேறு நிலைகளில் ஒருங்கிணைந்து நடத்துகின்றன.
அதேபோல, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஸ்டேட் போர்டு போன்றவற்றில் எந்த பாடத்திட்டத்தை தேர்வு செய்தால் ஜேஇஇ தேர்வுக்கு உதவும் என்பதை கருத்தில் கொண்டு பிளஸ் 1 படிப்பைத் தேர்வு செய்யலாம்.
ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப, திறமைக்கேற்ப படிப்பையும், தேர்வையும் தேர்ந்தெடுத்து தொலைநோக்குடன் பயிற்சி மேற்கொண்டால் வெற்றி இறைவன் நாடினால் நிச்சயம்''
ليست هناك تعليقات:
إرسال تعليق