தினம் ஒரு தகவல் கார்களை ‘பார்க்கிங்’ செய்யும் ரோபோ A robot that ‘parks’ cars - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 25 December 2021

தினம் ஒரு தகவல் கார்களை ‘பார்க்கிங்’ செய்யும் ரோபோ A robot that ‘parks’ cars

பெருநகரங்களில் வாகன பெருக்கம் அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதன் விளைவாக வாகனங்களை பார்க் செய்வது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இடப்பற்றாக்குறைதான் இதற்கு முக்கிய காரணம். இதற்கும் தற்போது தீர்வு கண்டுள்ளது சீன நிறுவனம். ரோபோ மூலம் காரை பார்க் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது, அந்நிறுவனம். 

 லேசர் வழிகாட்டுதல் மூலம் கார்களை இணையாக பார்க் செய்யும் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு கெடா என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் குறைந்த இடவசதி உள்ள இடங்களிலும் காரை பார்க் செய்ய முடியும். அதுவும் 2 நிமிடங்களில் காரை பார்க் செய்துவிடலாம். அதேபோல காரை வெளியில் எடுக்கவும் 2 நிமிடம் போதுமானது.

 மனிதர்கள் வழிகாட்டுதலின்படி காரை நிறுத்துவதால் ஏற்படும் நேர விரயம், கார்களில் கீறல் விழுவது ஆகியன தவிர்க்கப்படும். பொதுவாக நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஏற்படும் கீறலை காட்டிலும் காரை பார்க் செய்யும்போது ஏற்படும் கீறல்கள்தான் அதிகம். அந்த குறையையும் இந்த நுட்பம் போக்கியுள்ளது. மார்கோ வூ என்பவர் இந்த நுட்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ நுட்பத்தை எந்த இடத்திலும் நிறுவி செயல்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். 

 சீனாவில் பிரதான நகர்களில் அடுத்த 4 ஆண்டுகளில் கார்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது கார்களை நிறுத்த இட வசதி அளிப்பது பெரும் பிரச்சினையாக இருக்கும். அதற்கு இந்த நுட்பம் மிகப்பெரிய தீர்வாக இருக்கும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கார் நிறுத்துமிடங்களில் எந்தெந்த இடத்தில் இடம் காலியாக உள்ளது என்பதை கெடா சிக்னல் வெளிப்படுத்தும். இந்த சிக்னலை கம்ப்யூட்டரில் உள்ள வரைபடம் உணர்ந்து அங்கு காரை நிறுத்த ரோபோவுக்கு உத்தரவிடும். 

 இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோவின் விலை 1½ லட்சம் டாலராகும். இடப்பற்றாக்குறை உள்ள நகரங்களுக்கு இந்த நுட்பம் மிகப்பெரும் பொருட்செலவாக இருக்காது என்று மார்கோ வூ தெரிவித்துள்ளார். இப்போதே இந்த ரோபோ நுட்பத்தை வாங்கிப் பயன்படுத்த சிங்கப்பூர் மற்றும் லண்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. புதிதாக கட்டுமானங்களை உருவாக்கும் நிறுவனங்களும் இந்த ரோபோ கார் நிறுத்த நுட்பத்தை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாகவும் வூ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment