இடைநின்ற 1 லட்சத்து 77 ஆயிரம் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 19 January 2022

இடைநின்ற 1 லட்சத்து 77 ஆயிரம் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பு

இடைநின்ற 1 லட்சத்து 77 ஆயிரம் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பு இடைநின்ற ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 322 மாணவ-மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். இவற்றில் வட மாவட்டங்களில் தான் அதிகம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இடைநின்ற மாணவர்கள் கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கால் பெற்றோரின் வாழ்வாதாரம் பாதிப்பு உள்பட சில காரணங்களினால் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை கல்வித்துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டது. அந்த வகையில் ஜி.பி.எஸ். வாயிலாக அவ்வாறு இடைநின்ற மாணவர்களை பல்வேறு துறைகளை சார்ந்த 80 ஆயிரம் அலுவலர்களை கொண்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

அதன்படி, கடந்த 10-ந் தேதி நிலவரப்படி, இடைநின்ற 1 லட்சத்து 2 ஆயிரத்து 714 மாணவர்கள், 74 ஆயிரத்து 606 மாணவிகள், 2 திருநங்கைகள் என மொத்தம் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 322 பேர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகளில் சேர்ப்பு eduntz இந்த புள்ளி விவரங்களின் படி, கணக்கெடுக்கப்பட்ட மாணவர்கள் அவரவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் வெற்றிகரமாக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை தெரிவித்து இருக்கிறது. 

இதில் அதிகம் வட மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் தான் இருக்கின்றனர். இதன்படி பார்க்கையில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 526 மாணவ-மாணவிகளும், அதற்கு அடுத்த படியாக சென்னையில் 9 ஆயிரத்து 833 பேரும், செங்கல்பட்டில் 9 ஆயிரத்து 359 பேரும், கோவையில் 8 ஆயிரத்து 383 பேரும், கிருஷ்ணகிரியில் 8 ஆயிரத்து 65 பேரும் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். 

 இதேபோல், மதுரை, சேலம், தஞ்சாவூர், தர்மபுரி, வேலூர், காஞ்சீபுரம், திருப்பூர், திண்டுக்கல் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்து இருக்கின்றனர். இந்த முயற்சிக்கு சமீபத்தில் சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது கூட, பாராட்டி இருந்தார்.

No comments:

Post a Comment