நடுவழியில் டிரைவருக்கு வலிப்பு
10 கி.மீ. தூரம் தைரியமாக பஸ் ஓட்டிய பெண் பயணி
பாராட்டு குவிகிறது
நடுவழியில் டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதையடுத்து பெண் பயணி ஒருவர் 10 கி.மீ. தூரம் தைரியமாக பஸ்சை ஓட்டி சென்ற சம்பவம் மராட்டியத்தில் நடந்து உள்ளது.
பஸ்சை ஓட்டிய பெண் பயணி
மராட்டிய மாநிலம் புனே, வாகோலி பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகளுடன் மோராச்சி சின்சோலி பகுதிக்கு மினி பஸ்சில் சுற்றுலா சென்றனர். சுற்றுலாவை முடித்து விட்டு அவர்கள் கடந்த 8-ந்தேதி வீடு திரும்பி கொண்டு இருந்தனா். அப்போது மினி பஸ்சை ஓட்டி வந்த 40 வயது டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனால் அவர் பஸ்சை தொடர்ந்து ஓட்ட முடியாமல், ரோட்டில் வண்டியை நிறுத்தினார்.
இதனால் பஸ்சில் இருந்த குழந்தைகளும், பெண்களும் பதறிப்போனார்கள். இதேபோல டிரைவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இந்தநிலையில் பஸ்சில் இருந்த பயணி யோகிதா சாதவ் (42) என்ற பெண் தைரியமாக பஸ்சை ஓட்ட முன்வந்தார். அவர் சற்றும் பதற்றம் இன்றி துணிச்சலாக பஸ்சை ஓட்டினார்.
ஏற்கனவே கார் ஓட்டியிருந்த அனுபவம் இருந்ததால், முதல் முறை என்றாலும் அவர் பஸ்சை நேர்த்தியாக ஓட்டினார்.
10 கி.மீ. தூரம்
அவர் சுமார் 10 கி.மீ. தூரம் பஸ்சை ஓட்டிச்சென்ற நிலையில் கானேகாவ் கால்சா பகுதியில் மாற்று டிரைவர் மூலம் பஸ் இயக்கப்பட்டது. மேலும் வலிப்பால் பாதிக்கப்பட்ட டிரைவர் சிக்ராப்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பஸ்சில் இருந்த பெண்களும் வீடுகளில் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.
இந்தநிலையில் டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டவுடன் பெண் பயணி ஒருவர் தைரியமாக முன்வந்து பஸ் ஓட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் பஸ் ஓட்டிய பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment