தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உலர் உணவு பொருட்கள் வழங்கப்படும்.
அதன்படி, அரிசி நாளொன்றுக்கு 100 கிராம் வீதம் 1.100 கிலோ; பருப்பு நாளொன்றுக்கு 54 கிராம் வீதம் 594 கிராம்; கொண்டை கடலை அல்லது பாசி பருப்பு வாரம் ஒருமுறை 20 கிராம் வீதம் 40 கிராம்; முட்டை நாளொன்றுக்கு 1 வீதம் 11 முட்டைகள் வழங்கப்படும்.
அதுபோல, உயர் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, அரிசி நாளொன்றுக்கு 150 கிராம் வீதம் 1.650 கிலோ; பருப்பு நாளொன்றுக்கு 81 கிராம் வீதம் 890 கிராம்; கொண்டை கடலை அல்லது பாசிப் பருப்பு வாரம் ஒருமுறை 20 கிராம் வீதம் 40 கிராம்; முட்டை நாளொன்றுக்கு 1 வீதம் 11 முட்டைகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி) வரும் குழந்தைகளுக்கு 10-ந்தேதி முதல், அங்கன்வாடி பணியாளர்களால் சத்துணவு திட்ட பயனாளி குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, பருப்பு மற்றும் முட்டை ஆகியவற்றை உலர் உணவு பொருட்களாகவும்,
6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா வளரிளம் பெண்கள், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவை அவர்களின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் உலர் உணவாக தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின் மூலம் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் உலர் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்டதைவிட பள்ளி சத்துணவு பயனாளிகளுக்கு தற்போது கூடுதலாக பருப்பு, முட்டை மற்றும் கொண்டை கடலை அல்லது பாசி பயிறும் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் 42 லட்சத்து 13 ஆயிரத்து 617 பள்ளி மாணவ, மாணவிகள் பயனடைவர். இந்த உலர் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் திட்டம், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களால் கண்காணிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment