மகளிருக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் காளான் வளர்ப்பு கொட்டகை அமைக்க ரூ.2 லட்சம் மானியம்: ஊரக வளர்ச்சித்துறை தகவல்
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மகளிர் குழுக்கள் சொந்த தொழில் செய்து வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊரக வளர்ச்சி முகமை மூலம், கிராமங்களில் பல்வேறு தொழில்கள் மேற்கொண்டு வரும் மகளிர் கூட்டமைப்புகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் காளான் வளர்ப்புக்கான கொட்டகை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த தொழிலுக்கு அடிப்படையாக கொட்டகை வசதி இருந்தால் மகளிர் கூட்டமைப்புகள் எளிதாக காளான் வளர்ப்பு பணியில் ஈடுபட முடியும். இதன் மூலம் கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறுவதோடு, வேலைவாய்ப்பு கிடைத்து வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.இதேபோல் மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டம்தோறும் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இக்கொட்டகை அமைக்க தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களான மகளிர் மற்றும் மகளிர் குழுவைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கிராமங்களில் காளான் வளர்ப்பு பயிற்சி பெற்று தொழில் செய்து வரும் மகளிர் கூட்டமைப்புகளை கண்டறிந்து, அவர்களுக்கு கொட்டகை அமைக்க ரூ.2 லட்சம் மானியம் அளிக்கப்படும்.
இந்த வசதி இருந்தால், கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் சுழற்சி முறையில் காளான் வளர்ப்பில் ஈடுபடுவதோடு, நாள்தோறும் போதிய வருவாய் ஈட்டவும் முடியும். இந்த ஆண்டில் இத்திட்டம் மூலம் 40 காளான் கொட்டகைகள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அந்தந்த பகுதிகளில் ஊராட்சி ஒன்றியங்களை அணுகலாம்.
இத்திட்டத்தின் செயல்பாடு நன்றாக இருந்தால் மேலும் கூடுதலாக கொட்டகைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஊரக வளர்ச்சித்துறை முகமை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment