மருத்துவப் படிப்பில் சேர 40 ஆயிரம் பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இது கடந்த 2 ஆண்டுகளை விட குறைவு. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க 10-ந்தேதி (நாளை மறுதினம்) கடைசி நாள் ஆகும்.
மருத்துவப் படிப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அவசியம்.
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கொரோனா தொற்று காரணமாக தாமதமாக நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொள்வதற்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு குறித்த அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டது.
அதன்படி, ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த 19-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 957 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,925 பி.டி.எஸ். இடங்களும் இருக்கின்றன. இந்த இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் அவகாசம் முடிந்தது. இதற்கான அவகாசம் ஏற்கனவே நீட்டிக்கப்படாது என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெளிவாக குறிப்பிட்டுவிட்ட நிலையில், நேற்று மாலையுடன் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்றது.
40 ஆயிரம் பேர் விண்ணப்பப் பதிவு
அந்த வகையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்பு இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25 ஆயிரத்து 511 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14 ஆயிரத்து 777 பேரும் என மொத்தம் 40 ஆயிரத்து 288 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து இருக்கிறது. இது கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும்போது குறைவு. அந்த வகையில் 2019-20-ம் கல்வியாண்டில் 61 ஆயிரத்து 79 பேரும், 2020-21-ம் கல்வியாண்டில் 40 ஆயிரத்து 377 பேரும் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு கூரியர், தபால் அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10-ந்தேதி (நாளை மறுதினம்) ஆகும். அதனைத் தொடர்ந்து 2 வாரத்துக்குள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாகவும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்ததும், தமிழகத்தில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வு தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment