கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை! உயர்நீதிமன்றம் தீர்ப்பு! 


கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் என இரண்டுமே வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு எம்.டி, எம்.எஸ் முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என்று கடந்த 2021 அக்டோபர் மாதம் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீதம் அகில இந்திய இடஒதுக்கீடுக்கு சென்றுவிடும். மீதமுள்ள 969 இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் ஊக்க மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்குவதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது. எனவே, இதில் ஏதாவது ஒன்றைத்தான் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் மீதான வாதப்பிரதிவாதங்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நடந்தது. அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர், ஊக்க மதிப்பெண்ணை தகுதியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்களில், மலைப்பகுதி, அணுக முடியாத பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. மக்கள் நலன் தொடர்பான அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியக் கூடிய மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ் போன்ற உயர் படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்க எந்த தடையும் இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்கவும் தடை இல்லை என்று உத்தரவிட்டார்.

Post a Comment

أحدث أقدم

Search here!