சிறந்த கலைஞர்கள் விருது பெற வாய்ப்பு 9-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 26 January 2022

சிறந்த கலைஞர்கள் விருது பெற வாய்ப்பு 9-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக சிறந்த கலைஞர்கள் விருதுகள் பெற அடுத்த மாதம் 9-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். சிறந்த கலைஞர்கள் கலை பண்பாட்டு துறையின் கீழ் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைபுலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி மதுரை மாவட்டத்தில் 2002-2003-ம் ஆண்டு முதல் 2017-2018-ம் ஆண்டு வரையில் 80 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் 2018-19-ம் மற்றும் 2021-22-ம் ஆண்டுகளுக்கான விருதுகள் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் மதுரை மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக வழங்கப்பட இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஆகவே மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரை ஆட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புற கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 அவர்களில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கலைவளர்மணி விருதும், 36 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கலைசுடர்மணி விருதும், 51 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கலைநன்மணி விருதும், 65 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலைமுதுமணி விருதும் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பிக்கலாம் வயது மற்றும் கலை புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும். 

மதுரை மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் மற்றும் ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த கலைஞர்கள் விருது பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயது சான்று, முகவரி சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் கலை அனுபவ சான்றிதழ்களின் நகல்களுடன் உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, ரேஸ்கோர்ஸ் காலனி, தல்லாகுளம் என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment