பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்பட அரசு அதிகார அமைப்பு பணியிடங்களை இனி டி.என்.பி.எஸ்.சி.யே நிரப்பும் என்பதற்கான சட்டமசோதா நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
கிராம இளைஞர்களும்...
தமிழக சட்டசபையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முக்கியமான சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவின் நோக்கம் பற்றி அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், மாநில கழகங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் அதிகார அமைப்புகளில், குறிப்பிட்ட சில பதவிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையத்திற்கு கூடுதல் செயற்பணியாக ஒப்படைப்பு செய்வதற்கான சட்ட மசோதா இதுவாகும்.
பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் ஆள்சேர்ப்பு நடக்கிறது. இந்த பணிகளுக்கான விண்ணப்பதாரரின் தேர்வு முறையில் சமமான தன்மையைக் கொண்டு வந்து, அந்த பணிகளுக்கு, கிராமங்கள் மற்றும் ஒதுக்குப்புறங்களில் உள்ள இளைஞர்களும் விண்ணப்பிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
நிறைவேற்றம்
அதுபோன்ற பணியாளர் தேர்வை ஒப்படைப்பதன் மூலம் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் அதிகார அமைப்புகளில் எழும் காலியிடங்களுக்கான ஆள் எடுப்பு நடவடிக்கையில் நிபுணத்துவத்தைப் பேண முடியும். இனி வாரியங்கள், கழகங்கள் போன்ற அந்த நிறுவனங்கள், ஆள்சேர்ப்பு தொடர்பான இக்கட்டான வேலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படை வேலைகளில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியும்.
இந்த நிறுவனங்களுக்கான பணியாளர் தேர்வு தொடர்பான கூடுதல் பணிகளை, அரசியல் சாசனத்தின் 321-ம் பிரிவில் கூறப்பட்டபடி சட்டம் இயற்றி, அந்த பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை செயல்படுத்துவதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த சட்ட மசோதா, எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பணியாளர் சங்கம்
இந்த சட்ட மசோதா குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அ.விஜயன், மாவட்ட செயலாளர் ச.சத்தியசங்கர், சட்ட ஆலோசகர் கு.பால்பாண்டியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அனைத்து வகையான மாநில அரசு பணிகளுக்கும், இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மட்டுமே தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்யும் வகையில் புதிய சட்ட திருத்த முன்வரைவை பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார்.
இனி அனைத்தும் டி.என்.பி.எஸ்.சி.யின் கையில் உள்ளது. தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்து கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் காலியிடங்களை டி.என்.பி.எஸ்.சி.யே இனி நிரப்பும் என்பதற்கான சட்ட மசோதாவை வரவேற்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment