பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பரிந்துரையின் படி இன்னும் இரண்டு ஆண்டுகளில் அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்வதற்கு முனைவர் பட்டம் கட்டாயமாக்கப்படும் என்ற அறிவிப்பு 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டது.
கரோனாவின் தாக்கம் காரணமாக 2023, அக்டோபரிலிருந்து இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்று யூ.ஜி.சி. சமீபத்தில் அறிவித்திருக்கிறது. இதனால் முன்பு இருந்ததை விடவும் முனைவர் பட்டப் படிப்புக்கான அனுமதி சேர்க்கை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
அதேபோல, ஏற்கெனவே தனியார் கல்லூரிகள், ஆய்வகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பலரும் வேலையை விட்டுவிட்டு முழுநேர முனைவர் பட்டம் பயில்வதற்குச் சேர்கின்றனர்.
முழுநேர முனைவர் பட்டம் பெற்றால் மட்டுமே தொழிற்கல்விப் பட்டப் படிப்பைப் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கும், அரசின் ஆராய்ச்சி மையங்களில் விஞ்ஞானி பணிக்கும் சேர முடியும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளதன் விளைவே இது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் அதிகமான அளவில் முனைவர் பட்டம் பெறுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.
கேரள மத்திய பல்கலைக்கழகம் முழுநேர முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களிடத்தில் நடத்திய ஆய்வில் 70%-க்கும் அதிகமான மாணவர்கள் மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கான காரணிகளாக போதிய உதவித்தொகை இல்லாமை, ஆய்வு வழிகாட்டியின் ஒத்துழைப்பின்மை, குடும்பப் பொருளாதாரச் சூழல், அதிக நேர உழைப்பு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக உதவித்தொகை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள் 25 வயதுக்கும் மேற்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அந்த வயதில் உடன் படித்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் நிலையில் இருக்கும்போது வீட்டில் பணம் பெற்றுப் படிப்பது என்பதே சங்கடமான சூழல்தான்.
அதிலும் உதவித்தொகை இல்லாமல் கல்லூரிக் கட்டணம், விடுதி உணவுக் கட்டணம், ஆய்வுக்குச் செலவாகும் தொகை, ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதற்குத் தேவையான கட்டணம் உள்ளிட்ட அனைத்துக்கும் பெற்றோரைச் சார்ந்திருப்பது என்பது ஏழ்மையான பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைப் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
சீனா, பிரேசில் போன்ற நமக்கு இணையான நாடுகளில் ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் ஒதுக்கீடு செய்யும் தொகையில் கால் பங்குகூட இந்திய அரசு ஒதுக்குவதில்லை. ஒரு நாடு ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதைப் பொறுத்தே அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால், இந்திய அரசு ஏனோ ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தொகை ஒதுக்குவதில் சுணக்கம் காட்டிவருவதால் மேலும் நாம் ஆய்வில் பின்னோக்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மத்திய அரசு வழங்கும் யூ.ஜி.சி. கல்வி உதவித்தொகை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் உதவித்தொகை குறைவான நபர்களுக்கே வழங்கப்படுவதால் பல முழுநேர முனைவர் பட்ட மாணவர்களின் படிப்பு என்பது மாநில அரசின் உதவித்தொகையை நம்பித்தான் இருக்கிறது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு முழுநேர முனைவர் பட்டம் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஆண்டுக்கு ரூ.50,000-லிருந்து ரூ. ஒரு லட்சமாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
அதேபோல இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கான மாணவர்களின் குடும்பத்தின் வருமான வரம்பையும் ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தியுள்ளது. ஆனால், முழுநேர முனைவர் பட்டம் பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையானது மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுவருகிறது.
குறிப்பாக, நாம் வேளாண்மையைத்தான் முக்கியத் தொழிலாகக் கருதுகிறோம்.
அதற்குக் காரணம் நம் நாட்டில் 60%-க்கும் அதிகமானோர் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ வேளாண்மை மற்றும் அதுசார்ந்த தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். அப்படிப்பட்ட இன்றியமையாத வேளாண்மைத் துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வு மேற்கொள்ளும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 4,000 மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இங்கு முதுநிலைப் பட்டம் பயிலும் மாணவர்களுக்கே ரூ.17,000 உதவித்தொகை வழங்கும் நிலையில் அதற்கும் மேல் படிக்கும் முனைவர் பட்டத்துக்குக் குறைவான உதவித்தொகையை அரசு வழங்குவது மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
மேற்கு வங்கம், கேரளம், சத்தீஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்களிலும், மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் பயில்வதற்குச் சேர்ந்தவுடன் மாதந்தோறும் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை உதவித்தொகை அந்தந்த மாநில அரசுகளாலும் மத்திய அரசாலும் வழங்கப்படுகிறது. இதைவிட வேறு ஏதாவது அதிகமான உதவித்தொகைக்கு விண்ணப்பித்து அதை பெறும்வரை அந்த மாணவர் மாநில அரசின் உதவித்தொகையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு அமைகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் இப்படியான சூழல் இல்லை என்பதுதான் நிதர்சனம். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கல்விக் கட்டணமும் இங்கு அதிகமாகவே இருக்கிறது.
இதனால் பணவசதி படைத்தவர்கள் மட்டுமே முனைவர் பட்டம் பயிலக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆர்வமும் திறமையும் இருந்தும் பணவசதி இல்லாத காரணத்தால் பலர் முனைவர் பட்டம் பயில முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு முழுநேர முனைவர் பட்டம் பயிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கும் உதவித்தொகையை மற்ற மாநிலங்களுக்கு இணையாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
அதுதான் ஏற்கெனவே பயிலும் மாணவர்களுக்கும், புதிதாய் முனைவர் பட்டம் பயில்வதற்குச் சேரும் மாணவர்களுக்கும் உத்வேகமாய் இருக்கும். மாணவர்களின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் அரசு இந்த விஷயத்திலும் நல்ல முடிவை எடுப்பது பலரது வாழ்வில் வெளிச்சத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.
-
மு. ஜெயராஜ், வேளாண் ஆராய்ச்சியாளர்.
நன்றி: தி இந்து
No comments:
Post a Comment