மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப்பணி தேர்வுகள், இந்திய என்ஜினீயரிங் பணித்தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு தேர்வுகள், எஸ்.எஸ்.சி. தேர்வுகள், வங்கித் தேர்வுகள், ரெயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் என பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டி தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் தனி அலைவரிசை ஏற்படுத்த ரூ.50 லட்சம் செலவிடப்படும் என்றும் அப்போது கூறப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு 1,000 மணி நேரமும், எஸ்.எஸ்.சி., ரெயில்வே தேர்வு வாரியம், ஐ.பி.பி.எஸ். போன்ற தேர்வுகளுக்கு 500 மணி நேரமும், நடப்பு நிகழ்வுகள், நேர மேலாண்மை ஆகியவற்றுக்கு என 200 மணி நேரமும், குடிமைப் பணிகளுக்கான தேர்வு, இந்திய என்ஜினீயரிங் சேவை பணிக்கான தேர்வுகளுக்கு 1,300 மணி நேரமும் என மொத்தம் 3 ஆயிரம் மணி நேரம் இந்த அலைவரிசையில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான நிதியாக ரூ.36 லட்சமும், இதர செலவுக்கு ரூ.14 லட்சமும் என மொத்தம் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
மேற்கண்ட தகவல் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment