சென்னை அடையாறு குறுக்கு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற 18-வது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். 

ஆய்வின் போது, அசன் மவுலானா எம்.எல்.ஏ., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

அப்போது நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- 

தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 21 லட்சத்து 52 ஆயிரத்து 755 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 71 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

மாநில அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர்களின் எண்ணிக்கை 87.35 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியோர்களின் எண்ணிக்கை 61.46 சதவீதமும் உள்ளது. 

வருகிற 10-ந் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. தமிகத்தில் 35 லட்சத்து 46 ஆயிரம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 9 லட்சத்து 78 ஆயிரம் முன்கள பணியாளர்களும், 5 லட்சத்து 65 ஆயிரம் சுகாதார பணியாளர்கள், 20 லட்சத்து 3 ஆயிரம் பேர் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களும் இருக்கின்றனர். 

மேலும் இவர்களில், தடுப்பூசி போட்டுக்கொண்டு 35 வாரங்கள் முடிவுற்றவர்கள் அல்லது 9 மாதங்களை கடந்தவர்கள் அல்லது கடந்த ஏப்ரல் 14-ந் தேதிக்கு முன்பு வரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், இந்த பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள தகுதி உடையவர்கள். அந்தவகையில் 4 லட்சம் பேர் 10-ந் தேதிக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடையவர்களாக இருக்கின்றனர். 

பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி 10-ந் தேதி (நாளை) பட்டினப்பாக்கத்தில் உள்ள இமேஜ் அரங்கத்தில் வைத்து முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். 27 சதவீத நீட் இடஒதுக்கீடு விவகாரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது. எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு கலந்தாய்வை நடத்தலாம் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்திருக்கிறது. அந்தவகையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களான 15 சதவீத இடங்களுக்கு கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவார்கள். அதன்பிறகு ஜனவரி 3-வது வாரத்தில் தமிழகத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 

தமிழகத்தில் 15 சதவீதம் மத்திய அரசின் இடஒதுக்கீடு இடங்கள் போக, அரசு கல்லூரிகளில் 4 ஆயிரத்து 319 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 1,680 இடங்களையும் சேர்த்து 5 ஆயிரத்து 899 இடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி 4-வது வாரத்தில் தொடங்க இருக்கிறோம். தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7½ சதவீத இட ஒதுக்கீட்டின் படி, 439 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. தரவரிசை பட்டியல் வரும் போது இதுகுறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!