அரசு கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும்
தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், எந்த பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் 1,000 ஆசிரியர்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 6 ஆயிரத்துக்கும் கூடுதலான ஆசிரியர்களும் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் கூட, அரசுத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காததால் மனச்சோர்வும், மன உளைச்சலுக்கும் ஆளாகும் ஆசிரியர்கள், விரக்தியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகளை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment