ஐக்கிய அரபு அமீரக வாழ் 16 வயது இந்திய மாணவர் அஹான் ஷெட்டி, ‘சாட்’ எனப்படும் கல்வித் திறன் தேர்வில் 1600-க்கு 1600 மதிப்பெண்கள் எடுத்து வரலாறு படைத்துள்ளார்.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக இந்த ‘சாட்’ எனப்படும் கல்வித் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்ற அஹான் ஷெட்டி துபாயில் ஜெம்ஸ் மாடர்ன் அகாடமியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ‘சாட்’ தேர்வில் கேட்கப்பட்ட 154 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளித்து 1600-க்கு 1600 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார்.
அஹான் மும்பையைச் சேர்ந்தவர்.
கடந்த முறை எழுதிய ‘சாட்’ தேர்வில் 1600-க்கு 1520 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இது குறித்து அஹான் கூறுகையில், “மேலும் கூடுதலாக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் இந்த தேர்வை மீண்டும் எழுதினேன். நினைத்தது போலவே அனைத்துக் கேள்விகளும் எளிதாகி முழு மதிப்பெண் கிடைத்துள்ளது” என்றார்.
அடுத்த ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்ததும், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தனக்குப் பிடித்த இயற்பியல் பாடத்தையே அஹான் படிக்க விரும்புகிறார். பியானோ வாசிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள அவர், ரோபோட்டிக்சின் பெரிய ரசிகராகவும் இருக்கிறார்.
No comments:
Post a Comment