அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதி
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது.
அவ்வாறு பணியாளர் நிர்ணயம் 2021-2022ம் கல்வியாண்டிற்கான 1.8.2021 அன்றுள்ள நிலவரப்படி அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் இக்கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி 6 முதல் 8ம் வகுப்புக்கு 1:35 என்ற விகிதாச்சாரத்தின்படியும், 9 முதல் 10ம் வகுப்புக்கு 1:40 என்ற விகிதாச்சாரத்தின்படியும் கூடுதல் ேதவையுள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது.இந்தநிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குநர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் கல்வி நலன் கருதி இயக்குநரின் பொது தொகுப்பில் உள்ள ஆசிரியர்களின்றி உபரி காலி பணியிடங்களை கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
கூடுதல் பணியிடங்கள் அனுமதித்து வழங்கப்பட்ட பள்ளிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்பத்தகுந்த காலி பணியிடங்களாக கருதி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment