கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் சத்துணவு பயனாளிகளுக்கு அரிசி மற்றும் பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களுடன் முட்டையும் சேர்த்து அரசின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்கிட சமூக நல இயக்குனரகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, ஜனவரி மாதத்தில் 18 வேலைநாட்களுக்கான உலர் உணவுப் பொருட்களை சத்துணவு பயனாளிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 100 கிராம் அரிசியும், பருப்பு 40 கிராமும் வழங்கப்படுகிறது. 

 இதேபோல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 150 கிராம் அரிசியும், 56 கிராம் பருப்பும் கொடுக்கப்படுகிறது. ஜனவரி மாதத்துக்கு பயனாளிகளுக்கு 5 முட்டைகளும் சேர்த்து வழங்கப்பட உள்ளது. மாணவ-மாணவிகள் அடையாள அட்டையுடன் வந்தோ அல்லது பெற்றோர் மற்றும் பாதுகாவலரை அனுப்பி வைத்தோ இதனை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

ஏற்கனவே அங்கன்வாடி குழந்தைகளுக்கு அதன் பொறுப்பாளர்கள், குழந்தைகளின் வீடு தேடிச் சென்று அவர்களுக்கான சத்துணவு பொருட்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

Search here!