அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு தேர்வு அடிப்படையில் மட்டும்தான் பணி நியமனம் தெற்கு ரெயில்வே தகவல் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 31 January 2022

அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு தேர்வு அடிப்படையில் மட்டும்தான் பணி நியமனம் தெற்கு ரெயில்வே தகவல்

ரெயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு தேர்வு மூலம் முன்னுரிமை அடிப்படையில் தான் பணி நியமனம் வழங்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 


 அப்ரண்டீஸ் பயிற்சி இந்தியன் ரெயில்வேயில் பொன்மலை, பெரம்பூர் ரெயில்வே தொழிற்சாலை போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ரெயில்வே தொழிற்சாலைகளில் கல்வித்தகுதி அடிப்படையில் தொழிற்திறனை மேம்படுத்தும் வகையில் அப்ரண்டிஸ் (பழகுனர்) பயிற்சி வழங்கப்படுகிறது. அப்ரண்டிஸ் சட்டத்துக்கு உட்பட்டு ரெயில்வே தொழிற்சாலைகளில், அப்பகுதிகளில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு பல்வேறு வகைகளில் அப்ரண்டிஸ் பயிற்சி கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என இந்தியன் ரெயில்வே ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 அதன்படி, இளைஞர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சி முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழும் ரெயில்வே மூலம் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழை வைத்து, பயிற்சியில் கற்றுக்கொண்ட திறன் மூலம் அவர்கள் பிற தொழில் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம். 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை பொதுமேலாளர் அதிகாரத்தில், அவசர அடிப்படையில் ஏதாவது ஒரு வகையில் தேர்வு இன்றி அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களை 1-ம் மட்ட பணிகளில் உதவியாளர்களாக தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வந்தனர். 

 முன்னுரிமை அடிப்படையில் 2017-ம் ஆண்டுக்கு பிறகு பொது மேலாளரின் இந்த அதிகாரம் கைவிடப்பட்டதால், ரெயில்வே தேர்வு இன்றி பணியமர்த்தப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனாலும், பயிற்சி முடித்தவர்கள், பொதுமேலாளரின் அந்த அதிகாரத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும், தேர்வு இல்லாமல், அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு ரெயில்வேயில் பணி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். ரெயில்வே பணியை பொறுத்தவரை தேர்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகிறது. 

எனவே அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும். மேலும், அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு 1-ம் மட்ட பணியிட தேர்வில் 20 சதவீதம் அளவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அந்தவகையில் பயிற்சி முடித்தவர்கள், தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானதாகும். இதையடுத்து அவர்களை மருத்துவ தரத்துக்குட்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும். மத்திய அரசு பணிகளில், ரெயில்வே அமைச்சகம் மட்டுமே இதுபோன்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது. வேறு எந்த மத்திய அரசு நிறுவனமும் இதுபோன்ற சலுகைகளை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment