நமக்கு இயற்கையுடன் உள்ள நீண்டகாலத் தொடர்பு இருக்கிறது. மக்கள் எவ்வாறு இயற்கையை அணுகினார்கள் என்பதை வரலாற்றில் இருந்து புரிந்துகொள்ளும்போது, நிகழ்காலத்தில் இயற்கையைப் பேணுவதன் அவசியம் தெரியவரும். அதன் பலன் நமக்கு மட்டுமல்லாது, எதிர்காலச் சந்ததியினருக்கும் போய்ச் சேரும்.
இப்போது இயற்கை குறித்த சிந்தனை மக்களிடம் அதிகரித்திருக்கிறது.
இன்றைக்கும் இயற்கையோடு சேர்ந்த வாழ்வியலைக் கொண்ட மக்களும் இருக்கிறார்கள். ஆக, இயற்கையை நேசிக்கிற வழக்கம் நிகழ்காலத்திலும் தொடர்கிறது என்றே சொல்ல வேண்டும். வரலாறு நமக்குப் பாடம் கற்றுத் தருவதில்லை. உள்நோக்கிப் பார்ப்பதற்கான அறிவை அது நமக்கு தருகிறது.
ஒரு பக்கம் புலிகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், இன்னொரு பக்கம் மனிதர்கள் - காட்டுயிர் எதிர்கொள்ளல் நிகழ்வுகளும் அதிகரிக்கின்றன. புலிகள் அல்லது யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மனிதர்கள் - காட்டுயிர் எதிர்கொள்ளல் அதிகரிக்கிறது என்று கூறுவது தவறு.
உதாரணத்துக்குக் கிர் காடுகளில் உள்ள சிங்கங்களை எடுத்துக்கொள்வோம். கிர் மிகவும் பரந்த சரணாலயம் அல்ல. அங்கு ஒரு சிங்கம் 1,900 சதுரக் கிலோமீட்டர் அளவுக்குத் தன்னுடைய வாழிட எல்லையைக் கொண்டிருக்கிறது. இன்னொரு சிங்கத்தின் வாழிட எல்லையோ 1,200 சதுரக் கிலோ மீட்டர்களுக்குள் இருக்கிறது.
இப்போது இந்த இரண்டு சிங்கங்களும் தங்களுக்கான குறிப்பிட்ட எல்லைகளில் இருந்து வெளியே வந்து மனிதர்களைக் கொன்றாலோ அல்லது மனிதர்களால் கொல்லப்பட்டாலோ, அதை மனிதர்கள் - காட்டுயிர் எதிர்கொள்ளல் என்று கருத முடியாது.
காரணம், சரணாலய எல்லைகள் இருக்கின்றன என்பது உயிரினங்களுக்குத் தெரியாது. மனிதர்களுக்குத்தான் தெரியும்.
பொதுவாக, மனிதர்கள் - காட்டுயிர் எதிர்கொள்ளல் சம்பவங்களில் சிறு, குறு விவசாயிகள்தான் அதிகமாகப் பலியாகிறார்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், அது மட்டும் போதாது. அவர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்பட வேண்டும். அதோடு, கூட்டு வேளாண்மை முறைக்கும் நமது விவசாயிகளை பழக்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment