எப்.எம்.ஜி.இ., தேர்வு (FMGE screening test) 

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்தியர்கள், சொந்த நாட்டில் பயிற்சி மேற்கொள்ள அவசியம் எழுத வேண்டிய தேர்வு ஸ்கிரீனிங் டெஸ்ட் என்று பரவலாக அழைக்கப்படும் பாரின் மெடிக்கல் கிராஜுவேட் எக்சாமினேஷன்! மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் இந்திய மாணவர்களிடையே மிகவும் அதிகம். டாக்டராக வேண்டும் என்ற ஆசை ஒரு புறம் இன்றைய இளைஞர்களிடம் இருந்தாலும், பெற்றோரது விருப்பமாகவும், சமூக அந்தஸ்தை வழங்கும் ஒரு துறையாகவும் மருத்துவம் பார்க்கப்படுவதும், அதிக மாணவர்களை இத்துறை நோக்கி செல்ல தூண்டுகிறது. 

ஆனால், இன்ஜினியரிங் படிப்பை போன்று, மருத்துவம் படிக்க ஆசைப்படும் அனைத்து மாணவர்களுக்குமான சேர்க்கை இடங்கள் இந்தியா கல்வி நிறுவனங்களில் இல்லை. இதனால், இந்தியாவில் மருத்துவ இடம் கிடைக்காத மாணவர்களின் அடுத்த விருப்பம் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களாகவே உள்ளது. மேலும், இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவம் படித்து முடிக்க ஆகும் செலவை விட வெளிநாடுகளில் குறைவாகவே ஆகிறது என்பதும் பல பெற்றோரது கருத்தாக உள்ளது. 

இதனால், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பில் சேர்க்கை பெறுகின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களும் சரி, வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்களும் சரி படித்து முடித்து சொந்த நாடு திரும்பி, இங்கு பயிற்சி மேற்கொள்ளவும், மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவில் பதிவு செய்யவும், எப்.எம்.ஜி.இ., தேர்வை எழுதி அவசியம் தேர்ச்சி பெற வேண்டும். நேஷனல் போர்டு ஆப் எக்சாமினேஷன் நடத்தும் இத்தேர்வு பெரும்பாலும் கடினமானதாகவே கருதப்படுகிறது. 

தேர்வு முறை கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும் இத்தேர்வுக்கான மையங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும். 15.3.2002 தேதிக்கு பிறகு வெளிநாடுகளில் மருத்துவம் படித்த எவரும் இத்தேர்வை எழுத வேண்டும் என்பது கட்டாயம். மேலும், வெளிநாடுகளில் படித்த கல்வி நிறுவனங்கள், மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்படும் கல்வி நிறுவனங்களாக இருப்பதும் அவசியம். 

இந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் எம்.சி.ஐ., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. விபரங்களுக்கு: http://natboard.edu.in, www.nbe.edu.in மின்னஞ்சல்: fmge@natboard.edu.in தொலைபேசி எண்: 18002674003 ஒவ்வொரு ஆண்டும், 7,000 பேர், மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர். குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவுக்கு பெரும்பாலானோர் செல்கின்றனர். ஆனால், இந்த தகுதித் தேர்வை எழுதுவோரில், 15 சதவீதம் பேரே தேர்ச்சி பெறுகின்றனர். தேர்ச்சி பெறாதவர்கள், டாக்டராகப் பணிபுரிவதற்கான லைசென்ஸ் பெறாமலேயே, டாக்டராக பணியாற்றுகின்றனர். 

இதை தடுக்கும் வகையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவம் படிக்க வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்ற நடைமுறையைக் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மருத்துவக் கல்லுாரியில் சேருவதற்காக, 'நீட்' எனப்படும் நுழைவுத் தேர்வு, 2016 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!