தினம் ஒரு தகவல் மீன்பிடிக்கும் ஆசையில் கட்டிய வித்தியாசமான வீடு...!
நிலத்தில் கட்டப்படும் வீடுகளைத் தெரியும். வெனீஸ் நகரில் இருப்பது போல தண்ணீரில் உள்ள வீடுகளையும் தெரியும்.
நிலத்திலும் தண்ணீரிலும் ஒருசேர இருக்கும் வீட்டைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அமெரிக்காவில் இப்படி ஒரு வித்தியாசமான வீட்டை ஒருவர் கட்டியிருக்கிறார்...!
அவர் பெயர் பால் பிலிப்ஸ். அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் வசித்து வருகிறார்.
இவர் வழக்கமான பாணியில் இல்லாமல் புதுமையான, வித்தியாசமான வீடு ஒன்றை கட்ட திட்டமிட்டார்.
இதற்காக தீவிரமாக சிந்தித்து வித்தியாசமான ஒரு வீட்டைக் கட்ட முடிவு செய்தார். பாதி வீடு நிலத்திலும், மீதி வீடு குளத்திலும் இருக்குமாறு கட்ட முடிவு செய்தார்.
இவ்வாறு கட்டப்பட்ட வீடு அமெரிக்காவில் இப்போது புகழ் பெற்று வருகிறது.
சரி, எதற்காக இப்படி ஒரு வீட்டைக் கட்ட முடிவு செய்தார், பிலிப்ஸ்? அதை அவரே சொல்கிறார், கேளுங்கள்...
“மீன் பிடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுதான் முக்கியமான பொழுதுபோக்கு. அதேசமயம் வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டே மீன் பிடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன்.
அதுமட்டுமல்ல, ஒரு முறை ஏரியில் மீன் பிடித்தபோது, என்னை மீன் பிடிக்கவிடாமல் தடுத்தார்கள். அதனால் சொந்தமாக ஒரு குளம் ஒன்றை உருவாக்கவும் விரும்பினேன். இதற்காக நிலத்தை வாங்கினேன். குளத்தை வெட்டினேன்.
பின்னர் பாதி வீடு தரையிலும், மீதி வீடு குளத்தில் இருக்கும்படி வீடு கட்டத் தொடங்கினேன். இப்போது 1850 சதுர அடியில் வீட்டை கட்டி முடித்துவிட்டேன்.
பாதி குளத்திலும் பாதி நிலத்திலும் இருப்பதால் வீடு மிகவும் பிரபலமாகிவிட்டது. இப்போது மீன் பிடிக்க எங்கும் போவதில்லை. வீட்டுக்குள் இருந்தபடி கதவை திறந்தால் கீழே குளம். வசதியாக அமர்ந்துகொண்டு வெயில், மழை பற்றிக் கவலைப்படாமல் மீன் பிடிக்கிறேன்” என்கிறார், பிலிப்ஸ்.
No comments:
Post a Comment