எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு 9-ந் தேதி தொடங்குகிறது கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. 

திருப்புதல் 

தேர்வு தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. நவம்பர் மாதம் முதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் மாணவர்களுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு நடைபெறும். பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேவேளையில், பொதுத்தேர்வு எழுத உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி, மார்ச் ஆகிய மாதங்களில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

ஒத்திவைப்பு 

அதாவது எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஜனவரி 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் 21-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 2-வது திருப்புதல் தேர்வும் நடைபெறும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. பிளஸ்-2 மாணவர்களுக்கு ஜனவரி 19-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் 21-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 2-வது திருப்புதல் தேர்வும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததால் பொங்கல் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து ஜனவரி 31-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதன்காரணமாக பள்ளிகளில் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

திருப்புதல் தேர்வு தேதி அறிவிப்பு 

இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட முதல் திருப்புதல் தேர்வை நடத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில் 2-வது திருப்புதல் தேர்வுக்கான தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வருகிற 9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28-ந் தேதி முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான தேர்வு பிளஸ்-2 மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வருகிற 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28-ந் தேதி முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வு நடைபெறாத நிலையில் அதேபோன்று திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளதால் இந்த தேர்வு முக்கியமான தேர்வாக கருதப்படுகிறது.இதன் காரணமாக கூடுதல் நேரம் வகுப்புகளை நடத்தி இந்த தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!