மத்தியபிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள காண்டியாவில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர், விஜய்குமார் சான்சோரியா.
இவர் 39 ஆண்டுகால ஆசிரிய பணிக்குப் பின் சமீபத்தில் ஓய்வுபெற்றார். அப்போது அவருக்கு பணி நிறைவுவிழா ஒன்றுக்கு அவரது சக ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
ரூ.40 லட்சத்தையும்...
அப்போது யாரும் எதிர்பாராத ஓர் அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் நெகிழச் செய்துவிட்டார் விஜய்குமார்.
அது இதுதான்...
‘நான் எனது மனைவி, பிள்ளைகளின் ஒப்புதலுடன், சேமநல நிதி (பி.எப்.), பணிக்கொடை வாயிலாக கிடைக்கும் எனது ஓய்வுகால தொகை ரூ.40 லட்சத்தையும் இந்தப் பள்ளியின் ஏழை மாணவர்கள் படிப்புக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துவிட்டேன். எவர் ஒருவராலும் இந்த உலகத்தின் கஷ்டங்களை எல்லாம் ஒழித்துவிட முடியாது. ஆனால் நம்மால் முடிந்த நன்மையை பிறருக்குச் செய்ய வேண்டும்.’
கஷ்டப்பட்டேன், உதவுகிறேன்
பிற்பாடு, ஆசிரியரின் அறிவிப்பை கேள்விப்பட்டு அவரை அணுகி பேட்டி கண்ட நிருபர்களிடம், ‘வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டவன் நான். ரிக்ஷா ஓட்டியும், பால் விற்றும்தான் படித்தேன். 1983-ம் ஆண்டில் ஒருவழியாக ஆசிரியர் ஆனேன்.
இளவயதில் என்னைப் போல கஷ்டப்பட்ட பல மாணவர்களை கண்டிருக்கிறேன். அவர்களுக்கு உதவியிருக்கிறேன்.
அப்போது அவர்கள் முகத்தில் தோன்றும் மலர்ச்சியே என் மகிழ்ச்சி. என் குழந்தைகள் ஏற்கனவே நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
எனக்கு பெரிதாக பணத் தேவை இல்லாத நிலையில், ஏழை மாணவர்களுக்கு கொடுத்து உதவலாமே என்று நினைத்தேன்’ என்றார் எளிமையாக.
மனைவி, மகள்
இந்த அசத்தல் ஆசிரியரின் மனைவி ஹேமலதாவும், மகள் மகிமாவும், அவரது முடிவுக்கு உறுதுணையாக இருப்பதாக பெருமிதத்தோடு கூறுவதுதான் கூடுதல் சிறப்பு.
No comments:
Post a Comment