உலகத்தரம் வாய்ந்த தரமான கல்வி வழங்க
வருகிறது டிஜிட்டல் பல்கலைக்கழகம்
மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தரமான கல்வி வழங்க வசதியாக டிஜிட்டல் பல்கலைக்கழகம் வருகிறது.
டிஜிட்டல் பல்கலைக்கழகம்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் நாட்டை டிஜிட்டல் கல்விக்கு அழைத்து செல்வது தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்ந்து 3-வது ஆண்டாக நாட்டை அலைக்கழித்து வருகிற நிலையில், இந்த டிஜிட்டல் கல்வி முக்கியத்துவம் பெற்று வருகிறது.
இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறும்போது, “ஐ.எஸ்.டி.இ. (தொழில்நுட்ப கல்விக்கான இந்திய சொசைட்டி) தரநிலையில் உலகத்தரம் வாய்ந்த கல்விக்கான வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
200 டி.வி. சேனல்கள்
பிரதம மந்திரி இ-வித்யா திட்டத்தின்கீழ் ஒரு வகுப்பு, ஒரு டி.வி. சேனல் திட்டம் 12-ல் இருந்து 200 டி.வி. சேனல்களாக விரிவுபடுத்தப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முறையான கல்வி இழப்பை ஈடுகட்டுவதற்கு மாநிலங்கள் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பிராந்திய மொழிகளில் துணைக்கல்வியை வழங்க முடியும்.
இயற்கையான, பூஜ்ய பட்ஜெட்டில், நவீன விவசாயம் செய்ய வசதியாக வேளாண்மை பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment