The magic that nerve cells do in the brain தினம் ஒரு தகவல் மூளையில் நரம்பு செல்கள் செய்யும் மாயாஜாலங்கள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 24 February 2022

The magic that nerve cells do in the brain தினம் ஒரு தகவல் மூளையில் நரம்பு செல்கள் செய்யும் மாயாஜாலங்கள்

மூளையில் நரம்பு செல்கள் செய்யும் மாயாஜாலங்கள் 

மனித மூளையும் பிளாஸ்டிக் போன்று நெகிழும் தன்மை கொண்டது என நிரூபித்தது, ஒரு ஆய்வுக்குழு. மூளையின் வடிவம் பிளாஸ்டிக் போன்றதல்ல. மாறாக மூளை செயல்படும் தன்மை பிளாஸ்டிக் போன்றது. இதை ‘நியூரோபிளாஸ்டிசிட்டி’ என்கிறார்கள், சில ஆராய்ச்சியாளர்கள். 

 2011-ம் ஆண்டு சர்வதேச சமகால உயிரியியல் இதழில், எலியனார் மெக்வைர், கேத்தரின் வுல்லட் ஆகியோர் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டார்கள். லண்டன் பல்கலைக்கழகத்தின் ‘நியூரோ இமேஜிங்’ (மூளையை ஸ்கேன் செய்வது என்று வைத்துக்கொள்வோம்) மையத்தில் ஆய்வு செய்துவந்த இவர்கள், லண்டனில் உள்ள வாடகை கார் ஓட்டுனர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை ஒன்றை மேற்கொண்டார்கள். 

 தவிர, லண்டனுக்கு புதிதாக வந்திருப்பவர்கள் சிலரையும் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். லண்டன் வீதிகளும் இடங்களும் மிகவும் குழப்பமானவை. சரியான முகவரியை கண்டுபிடிக்க தேர்ந்த அறிவுத்திறன் வேண்டும். நினைவாற்றல் வேண்டும். இல்லையென்றால் குழப்பம் அதிகரித்துவிடும். இந்தநிலையில், இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட, லண்டனுக்கு புதிதாக வந்தவர்கள் யாருக்கும் லண்டன் வழித்தடங்கள் பெரிதாகத் தெரியாது. 

அவர்கள் அனைவரின் மூளையும் முதலில் ஸ்கேன் செய்யப்பட்டது. ஓட்டுனர்களுக்குத் தினமும் லண்டன் வழித்தடங்கள் பற்றிய தகவல்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. இவர்கள் யாரிடமும் ஜி.பி.எஸ். கருவி கிடையாது. அவர்கள் சில வாரங்கள் கார்களை ஓட்டினார்கள். இப்போது அவர்களுக்கு வழித்தடங்கள் பற்றி தேர்வு ஒன்று வைக்கப்பட்டது. இந்தத் தேர்வில் சிலர் தேறிவிட்டார்கள். பலர் தேறவில்லை. சரி அனைவரின் மூளையும் இப்போது மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டது. முடிவு ஆச்சரியமானது...! வழித்தடங்களை நன்றாகக் கற்றுத் தேர்ந்தவர்களின் மூளையில், ‘நியூரான்’ எனும் நரம்பு செல்களின் தொடர்புகள் முன்பைவிட அதிகமாகி இருந்தன. 

அதாவது, மூளையானது நடைமுறைக் கற்றலுக்கு ஏற்ப மாறி, நரம்பு செல்கள் தம் தொடர்புகளை மேம்படுத்திக்கொண்டிருந்தன. தேர்வில் தேறாதவர்களின் மூளை, பரிசோதனைக்கு முன்பு எடுக்கப்பட்ட படத்துடன் பெரும்பாலும் ஒத்துப்போனது. இதன் அடிப்படையில் அந்த ஆய்வாளர்கள் இருவரும் மூளையின் நெகிழ்வுத்தன்மையைப் பற்றி உலகுக்கு அறிவித்தார்கள். இதைப் புரிந்துகொள்ள மூளையின் அடிப்படைகளை பற்றிப்பார்ப்போம். நாம் பேசுவது, எழுதுவது, சுவைப்பது, கற்பது, கற்பிப்பது என எல்லாமே மூளையைப் பொறுத்தவரை சில நரம்பு செல்கள் செய்யும் மாயாஜாலங்கள்தான்.

No comments:

Post a Comment