பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு: ஆம்பலாப்பட்டு கிராம அரசுப் பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் மக்கள்
ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாப்பட்டு கிராம அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
DOWNLOAD THIS ALSO!!!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில், 28 மாணவர்கள் நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.70 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பான துண்டுப் பிரசுரங்களை மாணவர்களிடம் வழங்கி உள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.இதுகுறித்து ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏ.எல்.சுரேஷ்சேனாதிபதி கூறியது: கஜா புயல் பாதிப்பின்போது, எங்கள் கிராம இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, ஆம்பல் ரிலீப் ஃபண்ட் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழுவை ஏற்படுத்தி, நிதி வசூலித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம்.
பின்னர், அதே பெயரில் கிராம வளர்ச்சி மற்றும் அரசுப் பள்ளி வளர்ச்சிக்காக நிதி திரட்டினோம்.தொடக்கத்தில், இலுப்பைத்தோப்பு அரசுப் பள்ளியில் 1,500மாணவர்கள் படித்துவந்த நிலையில், தற்போது 500-க்கும் குறைவானவர்களே படித்து வருகின்றனர். எனவே, இப் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பரிசு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதற்காக, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் என 21 பேரிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் பெற்று, இந்த பரிசுத் தொகையை வழங்க உள்ளோம்.
வரும் ஆண்டுகளில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இதுபோன்று ஊக்கத்தொகை வழங்க உள்ளோம் என்றார்.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் கணேசன் கூறியபோது, “கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உள்ள இந்தப் பகுதியில், பரிசு பெறும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு அந்தத் தொகை மிக உதவியாக இருக்கும் என்றுகூறி, மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். பரிசுத் தொகையை பெறுவதற்காக மாணவர்களும் ஆர்வமுடன் படிக்கின்றனர்” என்றார்.
No comments:
Post a Comment